
விளக்கம்:
இந்த நிலையை அடைந்த ஒருவன் நிரந்தரமான அந்த ஆன்மாவை கண்டு மன அமைதியை பெறுவான். இவ்வாறு வெறுப்பு விருப்பு எந்தவித செயல்களிலும் நிகழ்வுகளிலும் இல்லாத ஒருவன் எப்போதும் இறையுணர்வில் இருப்பான். அதாவது சூடு – குளிர், நண்பன் – பகைவன், இன்பம் – துன்பம் இது போன்ற இருமைகளில் சமமாக இருப்பான்.
மேலும் தியான யோகம் பழக வேண்டும் என்றால் மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு சென்று சற்று உயரமான இருப்பிடம் அமைத்து அதன் மீது நேராக அமர்ந்து அமைதியாக இருந்து மனத்தை எதிலும் அலைபாய விடாமல் புத்தியால் தனது உள்ளே இருக்கும் ஆன்மாவை காண முயல வேண்டும். இவ்வாறு கண்டுவிட்டால் அதை விட மேலான இன்பம் எதுவும் இல்லை என்பது புரிந்து விடும். இப்படி தியானம் செய்ய வேண்டும் என்றால் அளவாக உண்ணவும் உறங்கவும் வேண்டும்.
இப்படி தியான நிலையை அடைந்து விட்டால் எல்லா உயிர்களிலும் ஆன்ம வடிவில் இருப்பது பகவான் என்பது புரிந்துவிடும். எல்லா உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்வான். அனைத்துமே இறைவனின் வடிவம் என்பது புரிந்துவிடும். மேலும் இந்த பிறவியில் ஒருவன் நல்ல காரியங்கள் பல செய்து தியானம் செய்து இறைநிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது இறந்துவிட்டால் அவன் மீண்டும் நல்லோர்கள் மத்தியில் பிறந்து முற்பிறவியில் பாதியில் விட்ட முயற்சியை மீண்டும் தொடர்ந்து செய்து அவன் இறைவனை அடைவான். ஒரு பிறவியிலிருந்து மருபிறவிக்கு செல்லும் போது முந்தய பிறவியின் குணமும் சேர்ந்தே வரும். பூவில் உள்ள மனம் காற்றோடு சேர்ந்து செல்வது போல் மனிதன் இறக்கும் போது அவனுடைய குணமும் ஆன்மாவோடு செல்லும். மறுபிறவியை அதனுடன் தொடருவான்.