அதிகாரம் 4
2 நகரைப் காப்பாற்றுகிறவரும், மக்களுக்குக் காவலரும், கடவுளுடைய கட்டளையை நுணுக்கமாய் அனுசரிக்கிறவருமாய் இருந்த அவரை, நாட்டைக் காட்டிக்கொடுக்கிறவர் என்று சொல்லத் துணிந்தான்.
3 இப்பகை எவ்வளவு மிஞ்சிப் போனதென்றால், சீமோனுடைய நண்பரில் சிலர் கொலை முதலாய்ச் செய்தார்கள்.
4 இவ்வித சச்சரவுகளினால் உண்டான ஆபத்தும், செலேசீரியாவிலும் பெனிசியாவிலும் படைத்தலைவனாய் இருந்த அப்பொல்லோனியுசுடைய மதியீனமும் சீமோனுடைய கெடுகுணத்தை அதிகரிக்கக் கூடுமென்று ஓனியாஸ் எண்ணி, அரசனிடம் போனார்.
5 நகரத்தாரைக் குற்றம் சாட்டுவதற்கன்று@ மாறாக எல்லாருடையவும் பொது நன்மையை முன்னிட்டுப் போனார்.
6 ஏனென்றால், அரசனின் அதிகாரம் இல்லாமல் காரியங்களைச் சீர்ப்படுத்துவதும், சீமோன் தன் மூடத்தனத்தை விட்டுவிடச் செய்வதும் கூடாத காரியமென்று கண்டார்.
7 ஆனால், செலேயுக்கஸ் மரணத்துக்குப் பின் மகா பெரியவன் என்று சொல்லப்பட்ட அந்தியோக்கஸ் ஆட்சியை ஏற்ற போது, ஓனியாசின் சகோதரன் யாசோன் என்பவன் தலைமைக்குருத்துவத்தை கைக்கொள்ள முயற்சி செய்தான்.
8 அரசனிடம் போய், முந்நூற்றறுபது வெள்ளித் தாலேந்துகளும், மற்ற வருமானங்களிலிருந்து எண்பது தாலேந்துகளும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தான்.
9 மேலும், உடற் பயிற்சிக்கூடம் ஒன்றும் இளைஞர் குழு ஒன்றும் அமைக்கத் தனக்கு அதிகாரம் கொடுக்கப் படுவதோடு கூட, யெருசலேமில் இருப்பவர்கள் அந்தியோக்கியரென ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்னும் நூற்றைம்பது தாலேந்துகள் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்தான்.
10 அதற்கு அரசன் இசைய, யாசோன் அதிகாரத்தைக் கைப்பற்றி, உடனே தன் குலத்தார் புறவினத்தாருடைய வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய ஆரம்பித்தான்.
11 உரோமையரோடு நட்பும் சமாதானமும் செய்யப் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எயுபோலேமுசின் தந்தை அருளப்பனை முன்னிட்டு, யூதருக்கு இரங்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரிமைகளை யாசோன் அழித்து விட்டு, நகரத்தாருடைய ஒழுங்கு முறைகளை நீக்கி, தீய ஏற்பாடுகளைச் செய்தான்.
12 ஏனென்றால், கோட்டை அருகிலேயே உடற் பயிற்சிக் கூடத்தை ஏற்படுத்தவும், இளைஞர் குழுவிலிருந்து நற்குணமுள்ளோரை வேசியர் இல்லங்களில் வைக்கவும் துணிந்தான்.
13 குருவல்லாத தீயவனானன யாசோனின் அருவருக்கத் தக்கதும் கேள்விப்படாததுமான தீச்செயல்களால் உண்டான புறவினத்தாருடையவும் அன்னியருடையவும் சேர்க்கையின் பலன் துவக்க நிலையிலே மட்டும் நின்று விடவில்லை@ மாறாக வளர்ச்சியும் அடைந்திருந்தது.
14 குருக்கள் முதலாய்ப் பீடத்தின் வேலைகளின் கவனம் வைக்காமல், கடவுள் ஆலயத்தைப் புறக்கணித்தும் பலி கொடுக்காமலும், மற்போர்களில் கலந்து விளையாடவும், அநீதப் பந்தயம் வைத்துச் சில்லு விளையாடவும் முனைந்திருந்தனர்.
15 சிலர் தாயகப் பெருமைகளை அவமதித்து, கிரேக்கருடைய மகிமைகளை மிகப் பெரியவையென்று எண்ணினார்கள்.
16 அவைகளை அடைவதற்காக ஆபத்து நிறைந்த சச்சரவுகளில் ஈடுபட்டனர்@ புறவினத்தாரின் வழக்கங்களைக் கண்டு பாவித்தனர்@ தங்கள் பகைவர்களும் கொலைகாரர்களுமாய் இருந்த அவர்களுக்கு அனைத்திலும் நிகராய் இருக்க விரும்பினார்கள்.
17 ஆனால் கடவுளின் கட்டளைகளை மீறுபவன் தண்டனை பெறாமல் இருக்க முடியாது. இதை வருங்காலம் எண்பிக்கும்.
18 ஐந்தாண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் திருநாள் தீர் நகரில் கொண்டாடப்பட்ட போது அரசனும் இருந்தான்@
19 அப்பொழுது தீயொழுக்கம் நிறைந்த யாசோன் எர்க்குலேசிற்குப் பலிசெலுத்த முந்நூறு வெள்ளித் திராக்மா என்ற நாணயங்களைக் கொடுத்து, தீயவரை யெருசலேமிலிருந்து அனுப்பினான். ஆனால், அவைகளைக் கொண்டு போனவர்களே, பலிகளுக்காக அவைகளைச் செலவிடுவது சரியல்ல என்றும், வேறு செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள்.
20 அவைகளை அனுப்பினவனால் அவை எர்க்குலேசின் பலிக்காகக் கொடுக்கப்பட்டன@ கொண்டு போனவர்களாலே கப்பல்களின் வேலைக்குக் கொடுக்கப்பட்டன.
21 தோலெமேயுஸ் பிலோமேத்தார் அரசனாக முடி சூடுவதை முன்னிட்டு, மினெஸ்தேயின் புதல்வன் அப்பொல்லோனியுஸ் எகிப்துக்கு அனப்பப்பட்ட போது, அவன் (பிலோமேத்தோர்) தன் அரச காரியங்களில் தன்னை அன்னியனாக வைத்திருப்பதை அந்தியோக்கஸ் அறிந்து கொண்டு, தன்னுடைய நலத்தை நாடி அங்கிருந்து புறப்பட்டு யோப்பா வந்து, அவ்விடமிருந்து யெருசலேம் சேர்ந்தான்.
22 யாசோனாலும் நகரத்தாலும் வரவேற்கப்பட்ட, தீவட்டிகள் ஒளிர, புகழுரை ஒலிக்க உட்புகுந்தான்@ அவ்விடமிருந்து தன் படையோடு பெனிசியாவுக்குத் திரும்பினான்
23 மூன்றாண்டுகளுக்குப் பிறகு யாசோன் மேற்சொன்ன சீமோனின் சகோதரன் மெனேலாவுசை அரசனுக்குப் பணம் கொண்டு போகும்படியும், முக்கியமான காரியங்களைப் பற்றி மறுமொழி கேட்டு வரும்படியும் அனுப்பினான்.
24 ஆனால் அவன் அரசனுடைய அதிகாரத்தைப் புகழ்ந்ததன் மூலம் அவனுடைய தயவை அடைந்து, தலைமைக்குருத்துவத்தைத் தானே கைப்பற்றிக் கொண்டு, யாசோன் கொடுத்ததற்கு மேல் முந்நூறு வெள்ளித் தாலேந்துகள் கொடுத்தான்.
25 அவன் அரசனுடைய கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு, குருத்துவத்திற்குத் தகுதியற்றவனாய் வந்தான்@ ஆனால், கொடியவனுடைய மனமும் காட்டு மிருகத்தினுடைய கோபமும் கொண்டவனாய் வந்தான்.
26 தன் சொந்த சகோதரனையே மோசம் செய்த யாசோனும் மோசம் செய்யப்பட்டு நாட்டினின்று துரத்தப் பட்டதனால் அம்மோனித்தரிடம் ஓடிப்போனான்.
27 மெனேலாவுஸ் அதிகாரம் பெற்றான்@ ஆனால், கோட்டைக்குத் தலைவனான சோஸ்திராத்துஸ், அரசனுக்கு மெனேலாவுஸ் வாக்குக் கொடுத்திருந்த பணத்தைக் கேட்ட போது, அவன் ஒன்றும் செய்யவில்லை.
28 ஏனென்றால், வரிகளை வாங்குவதும் சோஸ்திராத்துசினுடைய வேலை. ஆதலால், இருவரும் அரனிடம் அழைக்கப்பட்டார்கள்.
29 மெனேலாவுஸ் குருத்துவத்தினின்று நீக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவன் சகோதரன் லிசிமாக்கஸ் அப்பதவிக்கு வந்தான். சோஸ்திராத்து சோசீப்பிருக்கு அனுப்பப்பட்டான்.
30 இவ்வாறு இருக்கையில், தார்சு நாட்டினரும் மால்லோத்தாரும் தங்களையே அரசனுடைய வைப்பாட்டி அந்தியோக்கத்திக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டு கலகம் செய்ய முற்பட்டார்கள்.
31 அரசன் தன் தோழரில் ஒருவனான அந்திரோனிக்கஸ் என்பவனைத் தனக்குப் பதிலாய் விட்டுவிட்டு, அவர்களைச் சமாதானப்படுத்த விரைவாய் வந்தான்.
32 அதுவே ஏற்ற காலமென்று மெனேலாவுஸ் எண்ணி, சில பொற்பாத்திரங்களைக் கடவுள் ஆலயத்தினின்று திருடி அந்திரோனிக்கஸ் என்பவனுக்குக் கொடுத்தான்@ மற்றவற்றைத் தீர் நகரத்திலும் அடுத்த நகரங்களிலும் விற்று விட்டான்.
33 இது மெய்யென்று ஓனியாஸ் அறிந்த போது, தாப்னேயை அடுத்த அந்தியோக்கியாவில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு மெனேலாவுசைக் கண்டித்தார்.
34 ஆதலால், மேனேலாவுஸ் அந்திரோனிக்கஸ் என்பவனிடம் சென்று, ஓனியாசைக் கொலை செய்யும்படி கேட்டான். அவன் ஓனியாசிடம் வந்து, (அவர் ஐயப்பட்ட போதிலும்) சத்தியம் செய்து கொடுத்து, ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வரச் செய்து, நீதிக்கு அஞ்சாமல் உடனே அவரைக் கொன்றான்.
35 அதைக் குறித்து யூதர் மட்டுமல்ல, புறவினத்தாருங் கூடக் கோபங்கொண்டார்கள். அவ்வளவு பெரிய மனிதர் அநியாயமாகக் கொலையுண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
36 சிலிசியா நாட்டினின்று திரும்பி வந்த அரசனைப் போய்க்கண்டு, அந்தியோக்கியாவில் உள்ள யூதர்களும் கிரேக்கரும் ஓனியாஸ் அநியாயமாகக் கொலையுண்டதைப் பற்றி முறையிட்டார்கள்.
37 ஓனியாசைப் பற்றி அந்தியோக்கஸ் மனங்கலங்கி வருத்தமுற்று, இறந்தவருடைய நன்னடத்தையையும் அடக்கவொடுக்கத்தையும் நினைத்துக் கண்ணீர் சொரிந்தான்.
38 மிகுந்த கோபம் கொண்டு, அந்திரோனிக்கஸ் என்பவரிடமிருந்து அவனது அரசவுடையை உரிந்து விட்டு, நகர் முழுமையும் அவனைச் சுற்றி நடத்தி வரும்படி கட்டளையிட்டான்@ ஆண்டவர் அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க, ஓனியாசை அநியாயமாய்க் கொன்ற இடத்திலேயே கடவுளைப் பழித்த அவனுடைய உயிரை வாங்கும்படி செய்தான்.
39 மெனேலாவுசின் தூண்டுதலினால் லிசிமாக்கஸ் பற்பல தெய்வ துரோகச் செயல்களை கடவுள் ஆலயத்தில் செய்தான். அவன் ஏராளமான பொன்னைக் கொண்டு போன பிறகு, அவையெல்லாம் வெளியாகவே, திரளான கூட்டம் லிசிமாக்கஸ் என்பவனுக்கு எதிராய்க் கூடியது.
40 கடுங்கோபம் கொண்டு கும்பல் எழும்பவே, லிசிமாக்கஸ் ஆயுதந்தாங்கிய மூவாயிரம் தீயோரைக்கொண்டு கொடுமை செய்யத் துவங்கினான். வயதிலும் தீய பழக்கத்திலும் முதிர்ந்த திரான்னுஸ் என்பவன் இவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
41 ஆனால், மக்களோ லிசிமாக்கஸ் என்பவனின் முயற்சியைக் கண்டு கொண்டு, சிலர் கற்களையும், சிலர் பெருந்தடிகளையும் எடுத்துக் கொண்டார்கள்@ சிலர் லிசிமாக்கஸ் மீது சாம்பலை எறிந்தார்கள்.
42 பலர் காயப்பட்டனர்@ சிலர் கீழே விழுந்தார்கள்@ எல்லாரும் ஓடிப்போனார்கள். கடவுளைப் பழித்த அவனையும் கருவூலத்தின் அருகில் கொன்றார்கள்.
43 ஆதலால், அவர்கள் இவைகளைப் பற்றி மெனேலாவுசைக் குற்றம் சாட்டினார்கள்.
44 அரசன் தீர் நகர் வந்த போது, பெரியோரில் மூன்று பேரை அனுப்பி இதனை அறிவித்தார்கள்.
45 மெனேலாவுஸ் தான் தண்டனைக்கு உள்ளாகப் போவதைக் கண்டு, அரசனுக்குச் சமாதானம் கூறி ஏராளமான பணம் கொடுப்பதாகத் தோலெமேயுசுக்கு வாக்குக்கொடுத்தான்.
46 ஆதலால், குளிர்ச்சியை நாடி முற்றத்தில் இருந்த அரசனைத் தோலெமேயுஸ் தேடிப்போய், அவன் தீர்மானத்தை மாற்றும்படி செய்தான்.
47 அரசன் எல்லாத் தீங்கிற்கும் காரணமான மெனேலாவுசைக் குற்றங்களினின்று மன்னித்தான்@ தங்கள் நியாயத்தைச் சீத்தியரிடமே வழக்குரைத்திருந்தாலும் குற்றமற்றவர்களெனத் தீர்ப்புப் பெறக்கூடுமான இரங்கற்குரிய இவர்களை மரண தண்டனைக்குத் தீர்ப்பிட்டான்.
48 நகரத்துக்காகவும் மக்களுக்காகவும் புனித பாத்திரங்களுக்காகவும் நியாயம் தேடினவர்கள் அநியாய தண்டனைக்கு உள்ளானார்கள்.
49 அதுபற்றித் தீர் நகரத்தாரும் கோபம் கொண்டு, அவர்களைச் சிறப்புடன் அடக்கம் செய்தார்கள்.
50 அதிகாரம் செலுத்துகின்றவர்களுடைய பேராசையினால் மெனேலாவுஸ் அதிகாரத்தில் நிலைக்கொண்டான்@ தன் நகரத்தாருக்குத் தீங்கு விளைவிக்கும் தீய குணத்திலும் வளர்ந்தான்.