அதிகாரம் 15
2 ஆனால், கட்டாயத்தால் அவனைப் பின் தொடர்ந்த யூதர் அவனை நோக்கி: விலங்கைப் போன்றும் காட்டுமிராண்டியைப் போலவும் இவ்வாறு செய்யாதேயும்@ ஆனால், புனித நாளை மகிமைப் படுத்தும்@ எல்லாரையும் பார்க்கிறவரை வணங்கும் என்றார்கள்.
3 ஓய்வுநாளை அனுசரிக்கக் கட்டளையிட்டவரும் வல்லமையுள்ளவருமான அவர் விண்ணில் இருக்கின்றாரோ என்று அந்தப் பாவி கேட்டான்.
4 ஏழாம் நாளை அனுசரிக்கக் கட்டளையிட்ட வல்லமையுள்ளவரும் வாழ்பவருமான ஆண்டவர் விண்ணில் இருக்கிறார் என்று அவர்கள் மறுமொழி சொன்னார்கள்.
5 ஆனால், அவனோ: ஆயுதங்களை எடுக்கவும், அரச காரியங்களை நிறைவேற்றவும் கட்டளையிடுகிற நான் பூமியில் வல்லமையுள்ளவனாய் இருக்கிறேன் என்றான். ஆயினும், தன் கருத்துப்படி அவனால் செய்ய முடியவில்லை.
6 நிக்கானோர் மிக்க அகந்தையால் செருக்குக் கொண்டு, யூதாசை வென்று, அதன் நினைவாக வெற்றிச் சின்னம் ஒன்று எழுப்ப எண்ணியிருந்தான்.
7 மக்கபேயுசோ கடவுள் உதவி செய்வாரென்று எப்போதும் முழு உறுதியோடு நம்பியிருந்தார்.
8 அன்னியருடைய வருகையைப் பற்றி அஞ்சாதிருக்கவும், ஆனால், விண்ணினின்று தங்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை நினைத்துக் கொள்ளவும், இப்போதும் எல்லாம் வல்லவரால் தங்களுக்கு வெற்றி உண்டாகுமென்று நம்பவும் தம்முடையவர்களுக்கு அவர் துணிவூட்டினார்.
9 கட்டளையையும் இறைவாக்கினர்களையும் பற்றிப் பேசி, முன்னவர்கள் செய்த போர்களை நினைப்பூட்டி அவர்களை ஊக்குவித்தார்.
10 இவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்தி, அதே நேரத்தில் அன்னியருடைய பொய்மையையும், அவர்கள் ஆணை தவறுவதையும் காண்பித்தார்.
11 அனைவரையும் கேடயம், ஈட்டி என்னும் ஆயுதங்களினால் அல்ல, ஆனால் ஊக்கமூட்டும் சொற்களாலும் அறிவுரைகளாலும் போருக்கு ஆயத்தப் படுத்தினார். நம்பத் தகுந்த தன் கனவையும் வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தார்.
12 அவர் கண்ட காட்சி என்னவென்றால்: நற்குணம் இரக்க சிந்தையும் பொருத்தி, பார்வைக்கு அடக்கவொடுக்கமும், நடத்தையில் நேர்மையும், பேச்சில் திறமையும், சிறு வயது முதல் புண்ணியங்களில் பழக்கமும் ஆகிய குணங்களுள்ள தலைமைக்குருவான ஓனியாஸ் என்பவர் கைகளை நீட்டி யூதமக்கள் அனைவருக்காகவும் மன்றாடினார்.
13 பிறகு வயதிலும் மாட்சியிலும் வியப்பிற்குரியவரும் வணக்கத்திற்குரியவருமான வேறொருவரும் தோன்றினார்.
14 ஓனியாஸ் மறுமொழியாக: இவரே சகோதரருடையவும் இஸ்ராயேல் மக்களுடையவும் நண்பர்@ மக்களுக்காவும் புனித நகரத்துக்காகவும் வேண்டிக்கொள்ளும் இவர் கடவுளின் இறைவாக்கினராகிய எரெமியாஸ் என்பவர் என்றார்.
15 அப்பொழுது எரெமியாஸ் வலக்கையை நீட்டிப் பொன் வாளை யூதாசுக்குக் கொடுத்து:
16 கடவுளின் கொடையாக இப்புனித வாளைப் பெற்றுக்கொள்@ என்னுடைய இஸ்ராயேல் மக்களின் பகைவரைச் சிதறடிப்பாய் என்று கூறினார்.
17 வீரத்தைத் தூண்டக்கூடியனவும், இளைஞருடைய மனத்தை உற்சாகப்படுத்தக் கூடியனவுமான யூதாசின் இவ்வார்த்தைகளால் திடம் கொண்டு, புனித நகரும் கடவுள் ஆலயமும் ஆபத்தில் அகப்பட்டிருந்தமையால், காரியங்கள் தங்களுக்கு அனுகூலமாவதற்காக வீரத்தோடு எதிர்த்துப் போர் செய்ய எல்லாரும் தீர்மானித்தார்கள்.
18 தங்கள் மனைவி மக்களையும் சகோதரரையும் உறவினரையும் பற்றி அவர்கள் அவ்வளவு கவலைப் பட்டவர்களல்லர். கடவுள் ஆலயத்தினுடைய புனிதத் தன்மைக்காக அவர்களுக்கு உண்டாயிருந்த பயமே மிகப் பெரிதும் முதன்மையானதுமாய் இருந்தது.
19 நகரில் இருந்தவர்கள் போர் செய்யப் போவோர் மீது கொண்ட கவலை சொற்பமானதன்று.
20 போரின் முடிவு எப்படியாகுமென்று எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பகைவர்கள் ஏற்கனவே வந்து நின்றிருந்தார்கள். படை அணி அணியாய் நிறுத்தப்பட்டிருந்தது. யானைகளோடு குதிரை வீரரும் தகுந்த இடத்தில் நின்றிருந்தார்கள்.
21 அப்போது மக்கபேயுஸ் பகைவர் படைத்திரளின் வருகையையும், பற்பல ஆயுதங்களையும், யானைகளின் வெறியையும் கண்டு, விண்ணை நோக்கித் தம் கைகளை நீட்டி, ஆயுதங்களின் வலிமைக்குத் தக்காற் போலல்லாது தமது விருப்பத்தின்படியே தமக்கு உகந்தவர்களுக்கு வெற்றியைக் கொடுத்து அற்புதங்களைச் செய்யும் ஆண்டவரை மன்றாடினார்:
22 யூதேயாவின் அரசனான எசேக்கியாஸ் காலத்தில் உம் வானதூதரை அனுப்பிச் சென்னாக்கெரிப் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர்களைக் கொலை செய்த ஆண்டவரே,
23 விண்ணுலகின் அரசரே, இத்தருணத்திலும் உமது வலக்கையின் மகத்துவத்தால் பயமும் நடுக்கமும் வருவித்து,
24 உம் புனித மக்களுக்கு எதிராய்க் கடவுளைப் பழித்து வருகிறவர்கள் பயப்படும் படியாய் உம்முடைய நல்ல வானதூதரை எங்களுக்கு முன்பாய் அனுப்பும் என்று மன்றாடினார்.
25 நிக்கானோரும் அவனுடன் இருந்தவர் எக்காளங்களோடும் இன்னிசை முழக்கத்தோடும் நெருங்கி வந்தார்கள்.
26 யூதாசும் அவருடன் இருந்தவர்களும் கடவுளை மன்றாடிச் செபங்களோடு போரைத் தொடங்கினார்கள்.
27 கைகளால் போர் செய்தும் இதயத்தில் ஆண்டவரை வேண்டிக் கொண்டிருந்தமையால், ஆண்டவர் தங்களுடன் இருந்ததனால் பெரிதும் மகிழ்ந்து முப்பத்தையாயிரம் பேர்களுக்குக் குறையாமல் விழத்தாட்டினார்கள்.
28 போர் முடிந்து அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பும் போது, நிக்கானோர் தன் ஆயுதங்களோடு விழுந்து மடிந்தானென்று அறிந்தார்கள்.
29 ஆதலால், உரத்த குரலில் கூவி, பெரும் கூச்சல் எழுப்பி எல்லாம் வல்ல ஆண்டவரைத் தங்கள் தாய் மொழியில் வாழ்த்தினார்கள்.
30 அனைத்திலும் நகரத்தாருக்காக உடலையும் உயிரையும் கொடுக்க ஆயத்தமாயிருந்த யூதாஸ் நிக்கானோருடைய தலையையும், தோளோடு வெட்டப்பட்ட கையையும் யெருசலேம் கொண்டுப்போகக் கட்டளையிட்டார்.
31 அவர் அவ்விடம் வந்து சேர்ந்த போது, பீடத்தண்டையில் தம் இனத்தாரையும் குருக்களையும் கூப்பிட்டு, கோட்டையில் இருந்தவர்களையும் அழைத்தார்.
32 நிக்கானோருடைய தலையையும், எல்லாம் வல்ல கடவுளின் புனித ஆலயத்துக்கு எதிராக நீட்டிப் பெருமை பாராட்டிக் கொடுஞ் செயல் புரிந்த கையையும் காட்டினார்.
33 கடவுளைப் பழித்த நிக்கானோரின் அறுபட்ட நாக்கைத் துண்டு துண்டாய் வெட்டிப் பறவைகளுக்குப் போடும்படி கட்டளையிட்டார்@ அந்த அறிவு கெட்டவனுடைய கையைக் கடவுள் ஆலயத்துக்கு எதிரில் தொங்க விடும்படி செய்தார்.
34 ஆதலால், அனைவரும் விண்ணின் ஆண்டவரை வாழ்த்தி, தமது இருப்பிடத்தைத் தீட்டுப்படாமல் காப்பாற்றினவர் போற்றப்படுவாராக என்றார்கள்.
35 கடவுள் உதவியின் அடையாளம் தெளிவாய்க் காணப்படத் தக்கதாக, அவர் நிக்கானோருடைய தலையைக் கோட்டையின் உச்சியில் தொங்க வைத்தார்.
36 ஆதலால், எல்லாரும் ஒரே மனதாய் அந்நாளை யாதொரு ஆடம்பரமில்லாமல் ஒருபோதும் கழிய விடுவதில்லையென்று தீர்மானித்தார்கள்.
37 சீரியா மொழியில் மர்தோக்கேயுசின் நாளுக்கு முந்தின நாள் என்று சொல்லப்பட்ட ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாளில் விழாக் கொண்டாடத் தீர்மானித்தார்கள்.
38 நிக்கானோருக்கு இவை நேர்ந்த பிறகு, அக்காலம் முதல் நகரம் எபிரேயருக்குச் சொந்தமாயிற்று. நானும் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வரலாற்றை முடித்து விடுகிறேன்.
39 நான் சொல்லியவை சரியாயும் வரலாற்றுக்குச் சரியொத்ததாயும் இருக்குமேயானால், அதையே நானும் விரும்பினேன். குறைகள் உண்டெனில், மன்னித்துக் கொள்க.
40 ஏனென்றால், முந்திரிப் பழ இரசத்தை எப்போதும் குடிப்பது, அல்லது தண்ணீரை எப்போதும் குடிப்பது விருப்பமற்றதாய் இருக்கின்றது. ஆனால், அவற்றைக் கலந்து குடிப்பது இன்பம் தரும். அது போலவே, வாசகம் எப்போதும் நுணுக்கமாயிருந்தால் வாசிப்பவர்களுக்கு விருப்பம் தராது. எனவே, இது முடிவு பெற்றது.