அதிகாரம் 9
2 ஏனென்றால், அவன் பெர்சேப்போலிஸ் என்னும் நகரத்தில் புகுந்து, ஆலயத்தைக் கொள்ளையடிக்கவும், நகரத்தாரைக் கொடுமைப்படுத்தவும் முனைந்த போது, திரளான மக்கள் ஆயுதங்களோடு எதிர் வந்து அவனை ஓடவிரட்டினார்கள். ஆதலால், அந்தியோக்கஸ் துரத்தப்பட்டு வெட்கத்தோடு திரும்பி வந்தான்.
3 அவன் எக்பத்தானா அருகே வந்த போது நிக்கானோருக்கும் திமோத்தேயுசுக்கும் நிகழ்ந்தவற்றை அறிந்து கொண்டான்.
4 ஆதலால், கடும் கோபம் கொண்டு, தன்னைத் துரத்தியடித்தவர்களால் தனக்கு உண்டான அவமானத்தை யூதர் மேல் திருப்பலாமென்று எண்ணினான். ஆகையால், தன் தேரை ஓட்டும் படி கட்டளையிட்டு, (ஒருவிடத்திலும்) தங்காமல் பயணம் செய்தான். கடவுளின் தீர்ப்பும் அவனைத் தீவிரித்தது. ஏனென்றால், அவன் யெருசலேம் வந்து சேர்வதாகவும், அதை யூதருடைய கல்லறையாக்கி விடுவதாகவும் அகந்தையாய்ப் பேசினான்.
5 ஆனால், அனைத்தையும் அறியும் இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுள், குணப்படுத்த முடியாததும் கண்ணுக்குக் காணப்படாததுமான நோயினால் அவனை வதைத்தார். ஏனென்றால், அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடன், குடல்களில் தாங்க முடியாத நோவும் பொறுக்க முடியாத வயிற்று வலியும் அவனுக்கு உண்டாயின.
6 இப்படி அவனுக்கு நேர்ந்தது முறையே: ஏனென்றால், அவன் பற்பல, புது வகையான கொடுமைகளால் பலருடைய குடல்களை வதைத்திருந்தான்@ இப்பொழுதும் தன் கொடுங்குணத்தை விட்டவனல்லன்.
7 மாறாக, அகந்தை நிறைந்து, யூதர் மேல் கோபவெறி கொண்டு பயணத்தை விரைவாக்கக் கட்டளையிட்ட போது, செல்லும் வேகத்தால், தேரினின்று அவன் விழ நேரிட்டது. விழுந்த பொழுது நன்றாக அடிப்பட்டதனால், அவன் உறுப்புகள் வேதனைக்கு உள்ளாயின.
8 மனித இயல்புக்கு மேலான அகந்தையால் நிரப்பப்பட்டு, கடலின் அலைகளுக்குக் கட்டளையிடுகிறவனென்றும், உயர்ந்த மலைகளைத் தராசில் நிறுக்கிறவனென்றும் தன்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த அவன், இப்போது தரையில் வீழ்த்தப்பட்டு, தன்னிலும் உயர்ந்த கடவுளின் வெளிப்படையான வல்லமைக்குச் சாட்சியாக ஒரு கட்டிலில் வைத்துத் தூக்கிக் கொண்டு போகப்பட்டான்.
9 மேலும், அக் கொடிய பாவியின் உடலினின்று புழுக்கள் புறப்பட்டன. உயிரோடிருக்கும் போதே வேதனையால் அவன் தசைகள் அழுகி விழுந்தன. அவனிடமிருந்து புறப்பட்ட கொடிய நாற்றத்தை அவன் படைவீரர்களால் பொறுக்க முடியவில்லை.
10 சற்று முன்னே விண்மீன்களைத் தான் தொடமுடியும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனை, பொறுக்க முடியாத நாற்றத்தால், எவனும் தூக்கிப் போக முடியவில்லை.
11 ஆதலால், கடவுளின் தண்டனையாலும், தான் படும் வேதனைகள் வினாடிக்கு வினாடி அதிகரித்ததாலும் அவன் அறிவு பெற்று, தனது அகந்தையினின்று விலகித் தன்னைத் தான் உணரும் நிலைக்குக் கொண்டு வரப் பட்டான்.
12 தானே தன் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் போன போது, அவன்: கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை@ அழியக்கூடிய மனிதன் தன்னைக் கடவுளுக்குச் சமமானவனென்று எண்ணத்தகாது என்று கூறினான்.
13 பின்னர் இக் கயவன் ஆண்டவரை மன்றாடினான். ஆனால், அவருடைய இரக்கத்தை அவன் பெறவில்லை.
14 நகரத்தைத் தரைமட்டமாக்கி அதை இறந்தோரின் கல்லலறையாக்க வேண்டுமென்று விரைந்து வந்தவன், இப்போது அதைத் தன்னுரிமையில் விட்டு விட விரும்புகிறான்.
15 யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முதலாய்த் தகுதியுள்ளவரல்ல என்று எண்ணி, அவர்களைத் துண்டித்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் எறிந்து விடுவதாகவும், குழந்தைகளையும் கொல்வதாகவும் சொல்லியிருந்தவன், இப்போது அந்த யூதர்களையே அத்தேனியருக்குச் சமமானவர்களாக்குவதாக வாக்குறுதி கொடுக்கிறான்.
16 தான் முன் கொள்ளையடித்த புனித ஆலயத்தை விலையுயர்ந்த அணிகளால் அலங்கரிப்பதாகவும், புனித பாத்திரங்களை அதிகரிப்பதாகவும், தன் வருமானங்களினின்று பலிகளுக்கான செலவுகளைக் கொடுப்பதாகவும்,
17 மேலும், தானே யூதனாய் மாறுவதாகவும், உலகெங்கும் சென்று கடவுளின் வல்லமையை வெளிப்படையாய் அறிவிக்கப் போவதாகவும் வாக்குறுதி கொடுக்கிறான்.
18 ஆயினும், அவன் துன்பங்கள் நீங்கவில்லை. ஏனென்றால், கடவுளுடைய நீதியான தீர்ப்பு அவன் மேல் இருந்தது@ ஆதலால், அவன் அவநம்பிக்கை கொண்டு, மன்றாடும் வகையில் யூதருக்குக் கடிதம் ஒன்று எழுதினான்.
19 அரசனும் பிரபுவுமான அந்தியோக்கஸ் மிக மேன்மை தங்கிய நகர மக்களாகிய யூதருக்கு வாழ்த்துகள் பல கூறி, உங்களுடைய நலத்தையும் மகிழ்வையும் கோருகிறேன்.
20 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருந்து, உங்கள் எண்ணப்படியே அனைத்தும் நிகழுமாகில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
21 நான் நோயினால் அவதியுற்ற போதிலும், உங்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். பாரசீக நாடுகளினின்று நான் திரும்புகையில் கொடிய நோயால் பீடிக்கப்பட்டேன். எனவே, பொதுநன்மைக்காகக் கவலை எடுத்துக் கொள்வது அவசியமென்று எண்ணினேன்.
22 நான் அவநம்பிக்கை படுவதில்லை@ நோயினின்று தப்பிக் கொள்வேனென்று எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.
23 என் தந்தை மலை நாடுகளில் தம் படையை நடத்திய போது, தம் ஆட்சியைத் தமக்குப் பின் யார் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று காண்பித்தார்.
24 ஏனென்றால், ஏதேனும் மாறுபாடு நடந்தாலும், அல்லது தொல்லைகள் ஏற்பட்டு அறிவிக்கப்பட்டாலும், தம் ஆட்சிக் காரியங்களை ஏற்று நடத்தும் அதிகாரம் யாருக்கு விடப்பட்டிருக்கிறதென்று, அரசின் குடிகள் தெரிந்து கொண்டு கலங்காதிருக்கும் வண்ணம் இவ்வாறு செய்தார்.
25 அவர் இவ்வாறு செய்ததை மனத்தில் கொண்டும், இன்னும் அடுத்த நாடுகளில் வலிமையுள்ளோர் சிலர் தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களென்பதை அறிந்தும், நான் மலை நாடுகளுக்கு வந்த போது உங்களில் பலரிடம் நான் ஏற்றிக் கூறிய என் மகன் அந்தியோக்கஸ் என்பவனை அரசனாக நியமித்தேன். அவனுக்கும் இவ்வாறு எழுதியுள்ளேன்.
26 ஆதலால், பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு நான் செய்த நன்மைகளை நீங்கள் நினைத்து, ஒவ்வொருவரும் எனக்கும் என் புதல்வனுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கும் படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
27 ஏனென்றால், அவன் என் கொள்கையைப் பின்பற்றி அன்போடும் பண்போடும் நடந்து கொள்வானென்றும், உங்களுக்குப் பொது மனிதனாக இருப்பானென்றும் நம்புகிறேன் என்று எழுதினான்.
28 ஆனால், கொலைகாரனும் கடவுனைப் பழித்தவனுமான அவன் கடினமாய் வதைக்கப்பட்டு, மற்றவர்களைத் தான் நடத்தினது போலவே, மலைகளில் அன்னியனாகப் பரிதாபமாய் மரணம் அடைந்து தன் முடிவை எய்தினான்.
29 அவனுடன் பாலுண்டு வளர்ந்தவனான பிலிப்பு என்பவன் அவன் உடலைக் கொண்டு போனான். ஆனால், அந்தியோக்கஸ் என்பவனின் புதல்வனுக்கு அஞ்சி, அவன் தொலெமேயுஸ் பிலோமேத்தோரிடம் எகிப்து நாட்டிற்கு ஓடிப்போனான்.