அதிகாரம் 7
2 அவர்களில் முதல்வன்: உனக்கு என்ன வேண்டும்? எங்களிடமிருந்து என்ன அறிந்துகொள்ள விரும்புகிறாய்? எங்கள் முன்னோருக்குக் கொடுக்கப் பட்ட கடவுளின் கட்டளைகளை மீறுவதை விட நாங்கள் சாகத் துணிந்திருக்கிறோம் என்றான்.
3 ஆதலால், அரசன் கடுங்கோபம் கொண்டு, பித்தளை அண்டாக்களையும் சூளைகளையும் சுட வைக்கும்படி கட்டளையிட்டான்@ அவை சூடு ஏறியவுடன், முதலில் பேசினவனுடைய நாக்கை அறுக்கும்படி கட்டளையிட்டான்@
4 அவனுடைய தலையின் தோலை உரித்து, கை கால்களின் நுனியை, அவன் தாய்க்கும் சகோதரருக்கும் முன்பாக, வெட்டும்படி செய்தான்.
5 இவைகளினால் ஒன்றுக்கும் உதவாத நிலையை அடைந்த அவனை நெருப்பின் ஓரமாய்க் கொண்டு போகக் கட்டளையிட்டு, அவனுக்கு மூச்சியிருக்கும் போதே அவனை அண்டாவில் இட்டு வாட்டும்படி சொன்னான். அவன் இவ்வாறு நீண்ட நேரம் வேதனைப்படும் போது, மற்றவர்கள் தங்கள் தாயோடு துணிவுடன் சாவதற்குத் தங்களைத் திடப்படுத்திக் கொண்டிருந்தார்கள்: ஆண்டவராகிய கடவுள் உண்மையைக் காண்பார்.
6 மோயீசன் மக்களுக்கு எதிராகச் சான்று கூறிப் பாடிய தம் சங்கீதத்தில் ~தம்முடைய ஊழியர்களுக்கு ஆறுதல் அளிப்பார்~ என்று கூறியது போல, எங்களுக்கும் அவர் ஆறுதல் அளிப்பார் என்று கூறிக் கொண்டார்கள்.
7 முந்தினவன் இவ்வாறு இறந்த பிறகு மற்றொருவனைக் கொடுமைப்படுத்தும்படி கூட்டி வந்தார்கள். அவனது தலையின் தோலை மயிரோடு உரித்த பிறகு, அவன் உடல் முழுவதும் உறுப்புகள் ஒவ்வொன்றையும் வதைப்பதற்கு முன் (பன்றி இறைச்சியை) உண்பானா என்று கேட்டார்கள்.
8 ஆனால், அவன் தன் முன்னோரைப் போன்று: நான் உண்ண மாட்டேன் என்றான். ஆதலால், அவனும் இரண்டாவதாக முந்தினவன் பட்ட பாடுகளைப் பட்டான்.
9 உயிர் பிரியப் போகும் வேளையில் அவன் அரசனை நோக்கி: நீ மிக அக்கிரமமாய் இவ்வாழ்வுலகத்தில் எங்களைக் கொல்கிறாய். உலக அரசரோ, தம் கட்டளைகளுக்காக நாங்கள் இறப்பதால், நித்திய வாழ்விற்கு எங்களை உயிருடன் எழுப்புவார் என்றான்.
10 இதன் பிறகு மூன்றாமவனைக் கொடுமைப் படுத்திளார்கள். அவர்கள் அவனைக் கேட்டபடி அவனும் தன் நாக்கையும் கைகளையும் துணிவுடன் நீட்டினான்.
11 அவன் நம்பிக்கையோடு அவர்களிடம்: வானத்தினின்று இவை எனக்குக் கிடைத்தன. ஆனால், கடவுளுடைய கட்டளைகளுக்காக இப்போது இவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால், அவரிடமிருந்து மறுபடியும் அவற்றை அடைவேனென்று நம்பியிருக்கிறேன் என்று கூறினான்.
12 அப்போது மன்னனும் அவனோடு இருந்தவர்களும், அவ்விளைஞன் வேதனைகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததால், அவன் துணிவைக் கண்டு வியப்புற்றார்கள்.
13 அவனும் இவ்வாறு இறந்த பிறகு, நான்காமவனையும் அவ்வண்ணமே துன்புறுத்தினார்கள்.
14 அவன் சாகப்போகுந்தருணத்தில்: மனிதரால் கொலைசெய்யப்பட்டவர்கள் கடவுளால் திரும்பவும் உயிர்ப்பிக்கப்படுவார்களென்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கலாம். நீயோ வாழ்விற்கு மறுபடியும் உயிர்க்கப் போவதில்லை என்று கூறினான்.
15 ஐந்தாமவனைக் கூட்டிவந்து, அவனையும் வதைத்தார்கள்.
16 அவன் அரசனை நோக்கி: நீ அழிவுள்ளவனாயிருந்தும் மனிதருக்குள்ளாக உனக்கு அதிகாரம் இருப்பதனால், நீ விரும்பியதைச் செய்கிறாய். எங்களுடைய குலம் கடவுளால் கைவிடப்பட்டதென்று நினையாதே.
17 சிறிது பொறு@ அவருடைய மிக்க வல்லமையால் உன்னையும் உன் தலைமுறைகளையும் எவ்விதமாய் வதைப்பாரென்று காண்பாய் என்று சொன்னான்.
18 அவனுக்குப் பிறகு ஆறாமவனைக் கூட்டி வந்தார்கள். அவன் உயிர் விடப்போகையில்: நீ வீணில் மோசம் போகாதே. நாங்களோ எங்கள் கடவுளுக்கு எதிராய்ப் பாவங்களைக் கட்டிக் கொண்டமையால், இத்தகைய பாடுகளை எங்களுக்காவே படுகிறோம். அவர் எங்களிடத்தில் வியப்பிற்குரியன செய்தார்.
19 கடவுளுக்கு எதிராக நீ போராட முயல்வதனால், உனக்குத் தண்டனை வராதென்று நீ எண்ணாதே என்றான்.
20 சொல்லற்கரிய வியப்பை உண்டாக்கும் (இவர்களின்) தாய் நல்லவர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு உகந்தவள்@ ஒரே நாளில் தன் ஏழு பிள்ளைகளும் கொலையுண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த இவள் கடவுள் மீது தனக்கு உண்டான நம்பிக்கையை முன்னிட்டு இவையனைத்தையும் நல்ல மனத்தோடு ஏற்றுக் கொண்டாள்.
21 ஞானம் நிறைந்தவளாய், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் தாய்மொழியில் துணிவுடன் அறிவுரை சொன்னாள்@ பெண் பிள்ளையின் பற்றுதலோடு ஆண் பிள்ளையின் திடத்தையும் சேர்த்தாள்.
22 அவள் அவர்களை நோக்கி: நீங்கள் என் வயிற்றில் எப்படித் தோன்றினீர்களென்று நான் அறியேன். ஏனென்றால், உங்களுக்கு ஆவியையும் ஆன்மாவையும் உயிரையும் கொடுத்தது நான் அல்ல@ உங்கள் உறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல.
23 ஆனால் உலகத்தைப் படைத்தவர் தாமே அவையெல்லாம் செய்தவர். அவரே மனிதனை உருவாக்கியவர். அனைத்திற்கும் முதற் காரணம் அவரே. அவருடைய கட்டளைகளை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே துன்பத்திற்குள்ளாக்குவதால், திரும்பவும் அவர் உங்களுக்கு ஆவியையும் உயிரையும் கொடுப்பார் எனக் கூறினாள்.
24 அந்தியோக்கஸ் தான் நிந்திக்கப்படுவதாக எண்ணினான்@ தான் சொல்லிய அவமானங்களெல்லாம் வீணானதைக் கண்டான்@ எல்லாருக்கும் இளையவன் எஞ்சியிருந்ததைக் கண்டு, அவனை வார்த்தைகாளால் மட்டும் தூண்டிநின்றானல்லன்@ மாறாக, அவனைச் செல்வமுள்ளவனும் பேறுபெற்றவனும் ஆக்கி, அவனை நாட்டுச் சட்டங்களினின்று விடுவித்துத் தன் நண்பனாகக் கொள்வதாகவும், அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொடுப்பதாகவும் ஆணையிட்டு உறுதிமொழிக் கூறினான்.
25 ஆனால், இளையவன் அவைகளுக்கு இணங்காததால், அரசன் தாயை வரவழைத்து, அவ்விளைஞனுக்கு அறிவுரை சொல்லும்படி அவளைத் தூண்டினான்.
26 ஆனால், அவன் அவளைப் பன்முறை ஏவிய பிறகே தன் புதல்வனுக்குப் புத்தி சொல்வதாக அவள் வாக்குறுதி கொடுத்தாள்.
27 ஆதலால், அவள் அவன் பக்கமாய்க் குனிந்து, கொடுங்கோலனைப் பொருட்படுத்தாமல், தன் சொந்த மொழியில்: என் மகனே, உன்னை ஒன்பதுமாதம் என் வயிற்றில் சுமந்தேன்@ மூன்றாண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்@ இந்த வயதுவரைக்கும் உன்னைக் காப்பாற்றினேன். ஆதலால், நீ என் மீது இரக்கமாய் இரு.
28 மகனே, விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் பார். இவை யாவற்றையும், மனித குலத்தையும் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினாரென்று கண்டறிவாய்.
29 இவ்வண்ணம், இக்கொலைகாரனுக்கு நீ அஞ்சாதிருப்பாய். ஆனால், உன் சகோதரருக்கு உகந்த பங்காளியாகி, உன் சகோதரரோடு கடவுள் இரக்கத்தில் நான் உன்னை ஏற்றுக் கொள்ளும்படி, நீ மரணத்தை ஏற்றுக் கொள்வாய் என்று கூறினாள்.
30 இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இளைஞன்: யாருக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அரசனுடைய கட்டளைக்கு நான் கீழ்ப்படியேன்@ மோயீசனால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்குத் தான் கீழ்ப்படிவேன்.
31 எபிரேயருடைய துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாய் இருக்கிற நீயோ கடவுளுடைய கைக்குத் தப்பிக் கொள்ள மாட்டாய்.
32 நாங்களோ எங்கள் பாவங்களுக்காக இவைகளைப் படுகிறோம்.
33 எங்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் எங்கள் ஆண்டவராகிய கடவுள் எங்கள் மீது சற்றே சினம் கொண்டிருக்கிறார்@ ஆனால், அவர் தம் ஊழியரோடு திரும்பவும் சமாதானமாவார்.
34 ஆனால், நீயோ, கயவனே, எல்லா மனிதரிலும் கொடியவனே, அவருடைய ஊழியர் மேல் கோப வெறிகொண்டு, வீண் நம்பிக்கையால் வீணே செருக்குக் கொள்ளாதே.
35 ஏனென்றால், எல்லாம் வல்ல கடவுளும், அனைத்தையும் பார்க்கிறவருமாகிய அவருடைய தீர்ப்பிற்கு நீ இன்னும் தப்பிக் கொள்ளவில்லை.
36 ஏனென்றால் என் சகோதரர் சொற்பப் பாடுபட்ட பிறகு நிந்திய வாழ்வின் உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். நீயோ உன் அகந்தைக்குத் தகுதியான தண்டனைகளைக் கடவுளின் தீர்ப்பினால் அனுபவிப்பாய்.
37 நானோ என் சகோதரரைப் போல் என் உயிரையும் உடலையும் நாட்டின் கட்டளைகளுக்காகக் கொடுக்கிறேன். எங்கள் இனத்தாருக்கு விரைவில் தயவு காண்பிக்கும்படிக்கும், அவர் ஒருவரே கடவுளென்று வேதனைகளாலும் அடிகளாலும் நீயே ஒத்துக் கொள்ளும்படி செய்வதற்கும் கடவுளை மன்றாடுகிறேன்.
38 எங்கள் குலம் முழுமையிலும் நியாயமாய் நிறைந்துள்ள எல்லாம் வல்லவருடைய கோபம் என்னோடும் என் சகோதரரோடும் நின்று போகும் என்றான்.
39 அப்போது, அரசன் கோப வெறிக்கொண்டு, தன்னை நிந்தித்ததைப் பொறுக்க மாட்டாதவனாய், அவனை எல்லாரையும் விடக் கொடுமையாய் வதைத்தான்.
40 ஆண்டவரை அனைத்திலும் நம்பி அவனும் மாசற்றவனாய் இறந்தான்.
41 பிள்ளைகளுக்குப் பிறகு தாயும் கொலை செய்யப்பட்டாள்.
42 ஆகவே, பலிகளைப் பற்றியும் கொடிய வாதைகளைப் பற்றியும் வேண்டிய அளவு சொல்லி விட்டோம்.