அதிகாரம் 3
2 அரசர்களும் பிரபுக்களும் அவ்விடம் வணக்கத்திற்கு உகந்தது என்று எண்ணினார்கள். ஆதலால், கடவுள் ஆலயத்தை மிகவும் விலையுயர்ந்த காணிக்கைகளால் சிறப்பித்தார்கள்.
3 எப்படியென்றால், ஆசியா அரசனான செலேயுக்கஸ் கூடப் பலிகளை நடத்துவதற்கு உதவியான எல்லாச் செலவுகளையும் தன் வருமானத்தினின்று கொடுத்தான்.
4 கடவுள் ஆலயத்துக்குத் தலைவனாக நியமிக்கப்பட்ட பென்யமீன் கோத்திரத்தானான சீமோன் என்பவனோ தலைமைக்குரு தன்னை எதிர்த்த போதிலும், நகரில் அநீதமான காரியத்தைச் செய்ய முயன்றான்.
5 ஆனால், ஓனியாசை வெல்லக் கூடாமையால், செலேசீரியா பெனிசியா நாடுகளில் அக்காலத்தில் படைத்தலைவனாய் இருந்த தார்சேயின் புதல்வன் அப்பொல்லோனியுசிடத்தில் வந்து,
6 யெருசலேமில் பணம் நிறைந்த கருவூலம் இருக்கிறது என்றும், திரண்ட பொதுப்பணம் ஏராளமாக உண்டு என்றும், அவை பலியிடும் காரியத்துக்குத் தேவையில்லை என்றும், அவை முழுவதும் அரசனுடைய கையில் விழக்கூடும் என்றும் அறிவித்தான்.
7 பணத்தைப் பற்றித் தான் கேட்டவைகளை அப்பொல்லோனியுஸ் அரசனிடம் தெரிவித்த போது, அவன் தன் செயலனான எலியோதோருசை அழைத்து, மேற்சொல்லிய பணத்தை எடுத்து வரும்படி கட்டளை கொடுத்து அனுப்பினான்.
8 உடனே எலியோதோரூஸ் செலேசீரியா, பெனிசியா நகரங்களைப் பார்க்கச் செல்பவன் போலத் தோன்றினாலும் உண்மையில் அரசனுடைய கருத்தை நிறைவேற்றுவதற்கே புறப்பட்டான்.
9 ஆனால், அவன் யெருசலேம் வந்து, நகரத்தில் தலைமைக்குருவால் மரியாதையாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, பணம் இருக்கிறதென்று தனக்குச் சொல்லப்பட்ட செய்தியை அறிவித்தான்@ தான் வந்த கருத்தையும் வெளிப்படுத்தினான்: உண்மையாகவே பணம் உண்டோ என்றும் கேட்டான்.
10 அப்போது தலைமைக்குரு: அவை பொதுப்பணம் என்றும், விதவைகளுடையவும் அனாதைப் பிள்ளைகளுடையவும் பொருள் என்றும் தெரியப்படுத்தினார்.
11 மேலும், தீயவனான சீமோனால் சொல்லப் பட்டவைகளில் சில, மாண்பு மிக்க இர்க்கானுஸ் தோபியாசுக்குச் சொந்தம் என்றும், வெள்ளியில் நாற்பது தாலேந்துகளும், பொன்னில் இருநூறு தாலேந்துகளும் மட்டுமே இருக்கின்றன என்றும்,
12 வணக்கத்தையும் புனிதத்துவத்தையும் முன்னிட்டுப் பூமியெங்கும் மதிக்கப்படும் இடத்திலும், கடவுள் ஆலயத்திலும் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் மோசம் செய்யக் கூடாது என்றும் சொன்னார்.
13 ஆனால் எலியோதோருஸ், அரசனால் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படி, பொருட்கள் அனைத்தும் அரசனிடம் கொண்டு போகப் படவேண்டும் என்றும் சொன்னான்.
14 ஆதலால், இவைகளை நிறைவேற்ற ஒருநாளை நியமித்து எலியோதோருஸ் கடவுள் ஆலயத்துள் புகுந்தான். நகர் முழுவதும் உண்டான பயம் சிறிதன்று.
15 குருக்கள் தங்கள் குருத்துவ ஆடைகளோடு பீடத்துக்கு முன்பாக நெடுங்கிடையாய் விழுந்து, பொதுப்பணத்தில் பங்குள்ளவர்களுக்கு அதைக் காப்பாற்றிக் கொடுக்கும்படி, பொதுபணத்தைப் பற்றிய சட்டத்தை ஏற்படுத்தியவரான விண்ணில் இருப்பவரை வேண்டிக் கொண்டார்கள்.
16 அப்போது தலைமைக்குருவின் தோற்றம் பார்ப்பதற்கு இதயத்தைப் புண்படுத்துவதாய் இருந்தது. ஏனென்றால், அவர் முகமும் நிறமாற்றமும் அவரது ஆன்மாவிலுள்ள துயரத்தை வெளிப்படுத்தின.
17 ஏனென்றால், பயமும் உடல் நடுக்கமும் அம்மனிதரை ஆட்கொண்டிருந்தன. அவரைப் பார்த்தவர்களுக்கு அவர் இதயத்தில் உறைந்து கிடந்த நோவை அவை தெளிவாகக் காட்டின.
18 மக்களும் வீடுகளினின்று கும்பல் கும்பலாய் ஓடிவந்தார்கள்@ கடவுள் ஆலயம் அவமதிக்கப்படப் போவதைக் கண்டு வெளிப்படையாய் மன்றாடினார்கள்.
19 பெண்கள் தோள் வரைக்கும் தவச் சட்டைகளை அணிந்து கொண்டு தெருக்களில் கூடினார்கள். அடைபட்டிருந்த கன்னியர்களில் சிலர் ஓனியாசிடம் ஓடினார்கள்@ சிலர் சுற்று மதிலுக்கு ஓடினார்கள்@ சிலர் பலகணிகள் வழியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20 எல்லாரும் விண்ணை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாடினார்கள்.
21 கலக்கமுற்றிருந்த கும்பலினுடையவும், பெரிதும் வருத்தமடைந்திருந்த தலைமைக் குருவினுடையவும் ஏக்கம் மிகவும் துயரத்துக்குரியதாய் இருந்தது.
22 தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டவை ஒப்புவித்தவர்களுக்காக முழுமையும் காப்பாற்றப்படும்படிக்கு எல்லாம் வல்ல கடவுளை அவர்கள் மன்றாடினார்கள்.
23 எலியோதோருசோவென்றால் தான் சொல்லியதை நிறைவேற்ற, தானே தன் ஊழியரோடு கருவூலம் இருந்த இடத்திற்கு வந்தான்.
24 ஆனால், தமது மாட்சியின் அடையாளத்தை வெளிக்காட்ட எல்லாம் வல்ல கடவுள் திருவுளங்கொண்டார். ஆதலால், அவனுக்குக் கீழ்ப்படியத் துணிந்தவர்கள் எல்லாரும் கடவுளுடைய வலிமையால் விழத்தாட்டப்பட்டார்கள். பயமும் கலக்கமும் அவர்களை ஆட்கொண்டன.
25 பயங்கரத்துக்குரிய ஒருவர் ஒரு குதிரை மேல் தோன்றினார். அவர் விலையயுர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார். குதிரை தன் முன்னங்கால்களினால் எலியோதோருசை வலிமையுடன் உதைத்தது. அதன் மேல் இருந்தவரோ பொன்னாயுதங்கள் வைத்திருப்பதாகத் தோன்றினார்.
26 வலிமையை அணியாகக் கொண்டு, மாட்சியால் உயர்ந்து, அழகான ஆடைகள் அணிந்திருந்த வேறு இரு இளைஞர்களும் தோன்றினார்கள். அவர்கள் அவனை வளைத்து இருபுறத்திலும் நின்று கொண்டு, விடாமல் அடித்துக் காயப்படுத்தினார்கள்.
27 திடீரென எலியோதோருஸ் தரையில் விழுந்தான். காரிருள் அவனைச் சூழ்ந்தது. அவனைத் தூக்கி ஒரு நாற்காலியில் வைத்து வெளியே கொண்டு சென்றார்கள்.
28 முன் சொல்லிய கருவூலத்தில் பல காலாட்களோடும் ஏவல்களோடும் புகுந்த அவன் ஒருவருடைய உதவியும் இல்லாமல் வெளியே கொண்டு போகப்பட்டான். இதில் கடவுளின் வல்லமை வெளிப்படையாய்த் தெரிந்தது.
29 கடவுளின் வல்லமையால் அவன் பேச்சில்லாமலும், யாதொரு நம்பிக்கையும் உதவியுமில்லாமலும் கிடந்தான்.
30 அவர்களோ ஆண்டவரைப் போற்றினார்கள். ஏனென்றால், அவர் தமது இடத்தை மாட்சிப்படுத்தினார். சிறிது நேரத்துக்கு முன் பயத்தாலும் கலக்கத்தாலும் நிறைந்திருந்த கடவுள் ஆலயம், எல்லாம் வல்ல ஆண்டவர் தோன்றவே, அக்களிப்பாலும் அகமகிழ்வாலும் நிரப்பப்பட்டது.
31 அப்போது எலியோதோருசுடைய நண்பரில் சிலர் குற்றுயிராய்க் கிடந்த அவனுக்கு உன்னத கடவுள் உயிர்க் கொடுக்கும்படி, ஓனியாஸ் உடனே மன்றாடவேண்டும் என அவரைக் கேட்டுக் கொண்டார்கள்.
32 யூதரால் எலியோதோருசுக்குத் தீமை செய்யப்பட்டதென்று அரசன் ஐயுறுவானென்று தலைமைக் குரு எண்ணி, அவன் உடல் நலம் பெற (ஆரோக்கிய) பலி ஒப்புக்கொடுத்தார்.
33 தலைமைக்குரு மன்றாடிய போது, அதே இளைஞர்கள் முன் போலேவே ஆடை அணிந்து கொண்டு எலியோதோருசுக்குத் தம்மைக் காண்பித்து: ஓனியாஸ் குருவுக்கு நன்றிகூறு@ ஏனென்றால், அவரை முன்னிட்டு ஆண்டவர் உனக்கு உயிரளித்தார்.
34 கடவுளால் தண்டிக்கப்பட்ட நீயோ கடவுளுடைய மாட்சியையும் வலிமையையும் எல்லாருக்கும் தெரியப்படுத்து என்று சொல்லி, மறைந்து போனார்கள்.
35 எவியோதோருஸ் கடவுளுக்குக் காணிக்கை ஒப்புக்கொடுத்து, தனக்கு உயிர்கொடுத்தவருக்குப் பெரிய வாக்குறுதிகளைச் செய்து, ஓனியாசுக்கும் நன்றிசெலுத்தி, தன் படையைக் கூட்டிக் கொண்டு அரசனிடம் திரும்பினான்.
36 தன் கண்கள் கண்ட கடவுளுடைய அரும்பெரும் செயல்களைப் பற்றி அனைவருக்கும் சான்று பகர்ந்தான்.
37 யெருசலேமுக்கு மறுபடியும் அனுப்புவதற்கு எவன் தகுதியானவனென்று, அரசன் எலியோதோருசைக் கேட்டபோது, அவன்:
38 உமக்கு யாரேனும் பகைவன் இருந்தால், அல்லது உமது அரசைக் கைப்பற்றத் தேடுகிறவன் யாரேனும் இருந்தால், அவனை அவ்விடம் அனுப்பும். அவன் அடிபட்டுத் தப்பி வருவானேயாகில், அவனை நீர் திரும்ப ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், அவ்விடத்தில் உண்மையாகவே கடவுளின் வல்லமை விளங்குகின்றது.
39 ஏனென்றால், விண்ணில் வாழ்கிறவரே அவ்விடத்தைச் சந்நிப்பவரும், அதற்கு உதவி செய்கிறவருமாய் இருக்கிறார். அவ்விடத்தில் தீமை செய்ய வருகிறவர்களைத் தண்டித்து அழித்தொழிக்கிறார் என்றான்.
40 இவ்வாறு தான் எலியோதோருசுக்கும் நடந்தது@ கருவூலம் காப்பாற்றப்பட்டது.