சிந்துப் பள்ளத்தாக்கில் மேற்கு பஞ்சாபிலுள்ள ஹரப்பா, சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சாதாரோ ஆகிய இரு இடங்களிலும்தான் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்னிரண்டு இடங்களும் தற்போது பாகிஸ்தாளில் உள்ளன. இந்த அகழ்வாய்வுகளின் பயனாக ஒரு சிறந்த நாகரிகம் சிந்து வெளியில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இந்த நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என வழங்கப்பட்டது. சிந்துவெளிக்கு அப்பாலும் இந்த நாகரிகத்தின் தடங்கள் பரவியிருந்தமையால் பின்னர் இது 'சிந்து நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது. முதலில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவுகூறும் வகையில் 'ஹரப்பா நாகரிகம்' என்றும் இது வழங்கப்படுகிறது.
முக்கிய இடங்கள்
பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு: சிந்துவிலுள்ள கோட் டிஜி, ராஜஸ்தானிலுள்ள காளிபங்கன், பஞ்சாபில் ரூபார், ஹரியானாவில் பினவாலி, குஜராத்திலுள்ள லோத்தல், கர்கோடாடா மற்றும் தோலவிரா. பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும். சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ. இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.
தோற்றமும் வளர்ச்சியும்
கடந்த எண்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளின் பயனாக ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள பயன்படுகின்றன. இதனை நான்கு முக்கிய நிலைகளாகப் பகுத்து அறியலாம்.
1 . ஹரப்பாவிற்கு முந்தைய நிலை
2 ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை
3. ஹரப்பா பண்பாட்டின் முதிர்ந்த நிலை
4. ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை
ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம். மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்திலுள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன. இக்காலத்தில், மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர்.