இந்தியாவைப் பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். இருப்பினும், இந்திய துணைக்கண்டம் முழுவதற்கும் இந்த காலவரை ஒரே மாதிரியாகப் பொருந்துவதில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலம் அறிவியலின் துணைகொண்டு நன்கு வரையறுக்கப் படுகிறது, பொதுவாக ரேடியோ கார்பன் முறையே இதற்கு பயன் படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடும் முறையே ரேடியோ கார்பன் முறையாகும். மற்றொரு முறை டென்ட்ரோ காலக் கணிப்பு எனப்படுகிறது. மரத்தின் உள்வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு காலத்தை கணக்கிடுவதே இம்முறையாகும்.