
விளக்கம்:
இதில் முதலில் கூறிய ஞான மார்க்கம் மிகவும் கடினமானது. அனைத்து செயல்களையும் விட்டு விட்டு மனத்தை நிலைபடுத்தி தனக்கு உள்ளே இதயத்தில் இருக்கும் ஆன்மாவை காண முயல வேண்டும். மேலும் மனம் மிகவும் அலைபாயும் தன்மை உடையது. அதை ஒரு நிலை படுத்துவது மிகவும் கடினம்.
ஆனால் கர்மயோகமோ எளிதில் கடைபிடிக்க கூடியது. அதாவது இதில் உள்ள மனிதன் அனைத்து கடமைகளையும் செய்யலாம் ஆனால் செயலின் பலனில் பற்று / ஆசை வைக்க கூடாது. செயலின் விளைவு சாதகமாக இருந்தால் இன்பம் கொள்வதும் விளைவு பாதகமாக இருந்தால் துக்கம் கொள்வதும் கூடாது. இன்பம் - துன்பம் இரண்டையும் சமமாக கருத வேண்டும். ஏனெனில் இது தான் இயற்கை. இது மாறிமாறி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இப்படி பலனில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதால் இந்த மனிதன் எந்த பாவத்திற்கும் உள்ளாகாமல் தூயவனாக இருந்து இறைவனை முழுவதும் அறிந்து அவரை நோக்கி முன்னேறுகிறான்.
மேலும் அனைத்திலும் இறைவன் இருக்கிறார். ஆகையால் நண்பன் – பகைவன், நாய், மாமிசம் உண்பவன், அசையும் பொருள், அசையா பொருள், மண், கல், பொன் அனைத்தையும் சமமாக காண வேண்டும். முற்றிலும் உண்மையை உணர்ந்த மனிதன் இவ்வாறு காண்கின்றான்.