கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.
புதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலரின் பணிகள் திருத்தூதர் பணிகள் கூறும் ஒரு நூலும், 21 படிப்பினை வழங்கும் மடல்களும் மற்றும் ஒரு தீர்க்கதரிசன நூலும் காணப்படுகின்றன. கிபி 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் இணைக்கப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
- மத்தேயு நற்செய்திகள்
- மாற்கு நற்செய்திகள்
- லூக்காஸ் நற்செய்திகள்
- அருளப்பர் நற்செய்திகள்
- அப்போஸ்தலர் பணி
- உரோமருக்கு எழுதிய நிருபம்
- கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
- கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
- கலாத்தியருக்கு எழுதிய நிருபம்
- எபேசியருக்கு எழுதிய நிருபம்
- பிலிப்பியருக்கு எழுதிய நிருபம்
- கொலோசையருக்கு எழுதிய நிருபம்
- தெசலோனிக்கியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
- தெசலோனிக்கியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
- திமோத்தேயுவுக்கு எழுதிய முதலாவது நிருபம்
- திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
- தீத்துவுக்கு எழுதிய நிருபம்
- பிலமோனுக்கு எழுதிய நிருபம்
- எபிரேயருக்கு எழுதிய நிருபம்
- யாகப்பர் எழுதிய நிருபம்
- இராயப்பர் எழுதிய முதலாவது நிருபம்
- இராயப்பர் எழுதிய இரண்டாவது நிருபம்
- அருளப்பர் எழுதிய முதலாவது நிருபம்
- அருளப்பர் எழுதிய இரண்டாவது நிருபம்
- அருளப்பர் எழுதிய மூன்றாவது நிருபம்
- யூதா எழுதிய நிருபம்
- திருவெளிப்பாடு