அதிகாரம் 1
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உமக்கு அருளும் இரக்கமும் சமாதானமும் உண்டாகுக!
3 அல்லும் பகலும் என் செபங்களில் உம்மை இடையறாது குறிப்பிட்டு, முன்னையோர் செய்ததுபோலவே குற்றமற்ற மனச்சாட்சியோடு நான் வழிபடும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
4 அன்று நீர் சிந்தின கண்ணீரை நினைவில் கொண்டு உம்மை மீண்டும் காண விழைகின்றேன். அப்போது என் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பும்.
5 உம்மிடத்திலுள்ள நேர்மையான விசுவாசத்தை நினைவிற்கொண்டு வருகிறேன். இத்தகைய விசுவாசம் முதலில் உம் பாட்டி லோவிசாள், உம் தாய் ஐனிக்கேயாள் இவர்கள் உள்ளங்களில் குடி கொண்டிருந்தது. அதே விசுவாசம் உம் உள்ளத்திலும் இருக்கிறதென உறுதியாக நம்புகிறேன்.
6 உம்மீது என் கைகளை விரித்தால் கடவுளின் வரம் உமக்குள் வந்துள்ளது. அதை நீர் தீயெனப் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று உமக்கு நினைவுறுத்துகிறேன்.
7 கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.
8 ஆதலின் ஆண்டவரைப்பற்றிச் சாட்சியம் கூற வெட்கப் படாதீர். அவருடைய கைதியான என்னைக் குறித்தும் வெட்கப்படாதீர். கடவுளின் வல்லமை பெற்று நற்செய்திக்காக என்னோடு துன்புறத் தயங்காதீர்.
9 கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை@ தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது@
10 இக்காலத்தில் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசு உலகுக்குப் பிரசன்னமானதால் வெளிப்படையாயிற்று. அவர் சாவை அழித்து சாவே அறியா வாழ்வை நற்செய்தியின் வழியாய் ஒளிரச் செய்தார்.
11 நானோ இந்த நற்செய்தியின் தூதனாகவும் அப்போஸ்தலனாகவும் போதகனாகவும் ஏற்படுத்தப்பெற்றேன்.
12 இதன் பொருட்டே நான் இத்துன்பங்களுக்கு உள்ளானேன் ஆனால், வெட்கப்படவில்லை, யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்த இறுதி நாள் வரை பாதுகாக்க அவர் வல்லவரென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.
13 கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்திலும் அன்பிலும் வாழ்பவராய் என்னிடமிருந்து நீர் கேட்டறிந்த நலமிக்க வார்த்தைகளை வாழ்க்கைச் சட்டமாகக் கொண்டிரும்.
14 நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் உதவியினால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நற்போதனையைப் பாதுகாப்பீராக.
15 பிகெல்லு, எர்மொகேனேயு உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும் என்னைக் கைவிட்டனர் என்பது உமக்குத் தெரியும்.
16 ஒனேசிப்போருவின் குடும்பத்தின் மேல் ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில், அவர் துன்பங்களில் எனக்கு அடிக்கடி ஆறுதலளித்தார்@ விலங்கிடப்பட்ட என்னைக் குறித்து வெட்கப் படவில்லை.
17 அவர் உரோமைக்கு வந்தபொழுது அக்கறையோடு என்னைத் தேடிக்கண்டு பிடித்தார்.
18 இறுதி நாள் வரும்போது ஆண்டவரிடம் அவர் இரக்கத்தைக் கண்டடையுமாறு ஆண்டவர் அருள்வாராக. எபேசுவிலும் அவர் ஆற்றிய அரும்பணிகள் உமக்கு நன்றாகத் தெரியும்.