நாகப் பாம்பு தனக்குள் நஞ்சு இருப்பதைத் தெரிந்துகொண்டு, தன்னை மறைத்துக்கொண்டு வாழும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இருப்பவர்கள் வேளிப்படையாகப் பேசமாட்டார்கள். தண்ணீர்ப் பாம்புக்கு விடம் இல்லை. எனவே அது வெளிப்படையாக நீரில் மிதந்து திரியும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர் வெளிப்படையாகப் பெசுவர். நஞ்சு = விடம், கரவி = நெஞ்சில் வஞ்சகம்.
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. |
26 |
மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு.
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். |
27 |
படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம். அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம். கூற்றம் = சாகடிக்கும் தெய்வம்.
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று? |
28 |
மென்மையான சந்தனக் கட்டை தேய்ந்துபோன காலத்திலும் மணம் குறைவதில்லை. இது இயல்பு. வேம்பு, ஆத்தி, பனை – பூக்களைத் தாரில் அணியும் மூவேந்தர் தம் வருவாய் குன்றிச் செல்வத்தில் குறைந்த நிலை எய்தினாலும், பெருமிதம், கொடை மனப்பாங்கில் குறைவுபட மாட்டார்கள். இது இவர்கள் இயல்பு. கேட்டால் = கெடுதியால்.
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம். |
29 |
செல்வப் பேற்றைத் திருமகள் என்னும் பெண்தெய்வமாக எண்ணி வழிபடுவர். அவள் ஒருவனிடம் வந்தால், சுற்றத்தார் எல்லாம் விரும்பிச் சூழ்ந்துகொண்டு அவனிடம் வருவர். வானளாவிய செல்வம் பெருகும். உடலில் நல்ல அழகு தோன்றும். உயர்ந்த குலத்தவர் என்று போற்றப்படுவான். திருமகள் அவனிடமிருந்து பிரிந்து செல்லும்போது இவை அனைத்தும் அவனிடமிருந்து போய்விடும்.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். |
30 |
அறிவுடையோர் யார்? சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார். மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.
மூதுரை முற்றிற்று.