அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு. |
16 |
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும்.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு. |
17 |
நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார்.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? |
18 |
பொன்னால் செய்த குடம் உடைந்துவிட்டால் பொன்னாகவே இருந்து மீண்டும் உதவும். அதுபோலச் சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் சீரியராகவே விளங்கி மீண்டும் உதவுவர். மண்ணால் செய்த குடம் உடைந்தால் மீண்டும் மண் ஆகுமா? ஆகாமல் உதவாத, மக்காத ஓடாக அல்லவா மாறிவிடும். அதுபோலச் சீரியர் அல்லாதவர் உடைந்துபோனால் மீண்டும் உதவமாட்டார்.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி-தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். |
19 |
ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி மொண்டாலும் நாலு படி நீரை அந்தப் படியால் முகந்துகொள்ள முடியாது. அதுபோலத்தான் துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன் இருந்தாலும் அனுபவிக்க முடியுமா?
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு. |
20 |
உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன. நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.