இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். |
21 |
மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும்.
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. |
22 |
எந்தச் செயலும் ஒருவன் தலையில் எழுதியவாறே (nucleus-egg) நிகழும். மரபணுக்களின் பதிவில் உள்ளவாறே நிகழும். எண்ணிய செயல் நடக்கவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் மடத்தனமான நெஞ்சமே! எண்ணிப்பார். நீ நீனைத்தபடி எல்லாச் செயலும் நடந்துவிடுமா? கற்பக மரம் விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள். ஒருவன் பிள்ளையார் பெற்றது போல் மாம்பழம் பெறவேண்டும் என்று எண்ணிக்கொண்டு கற்பக மரத்தடியில் அமர்ந்தான். ஆனால் அந்தக் கற்பக மரம் (தின்றதும் சாவும்) எட்டிப்பழத்தைக் கொடுத்தது. என்ன காரணம்? அவன் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம். |
23 |
பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீர் ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். |
24 |
அன்னம் தாமரை பூக்கும் குளத்துக்குப் போய்ச் சேரும். அது போலக் கற்றாரைக் கற்றார் விரும்பி ஒன்றுசேர்வர். பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் முதுகாட்டிற்கு விரும்பிச் சென்று காக்கை பிணத்தை உண்ணும். அதுபோலக் கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்பிச் சென்று சேர்ந்துகொள்வார்கள். கற்பு = கற்றல்.
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். |
25 |