
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். |
11 |
நெல்லில் முளைப்பது அரிசியில் இருக்கும் பண்டுதான் (பரவிக்கிடக்கும் பழமை-மரபுக் கூறுதான்). என்றாலும் அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல ஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவி முதலானவற்றைச் செய்தளிப்போர் இல்லாமல் செயலை நிறைவேற்ற முடியாது.
மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். |
12 |
தாழம்பூ பெரிய மடலாகப் பூத்திருக்கும். (அதன் மணத்தை எல்லாரும் விரும்புவதில்லை) மகிழம்பூ அளவில் சிறியது. இதன் மணம் நெடுந்தொலைவு வீசும். இதன் மணத்தை எல்லாரும் விரும்புவர். அதுபோல எவரையும் உடல் அளவைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. மேலும் ஒன்று. கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் (ஊறலில்) வரும் நீர் பருகுவதற்குக் கூடப் பயன்படும்.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம். |
13 |
கவையாகப் பிரிந்து, கொம்புகளாக விரிந்து, காடுகளில் நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. பலரும் கூடியிருக்கும் மன்றத்தில் “படித்துச் சொல்” என்று நீட்டிய ஓலையை வாய்விட்டுப் படிக்காமலும், அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் குறிப்பினை அறிந்துகொள்ள மாட்டாமலும் நிற்பவன்தான் நல்ல மரம். கவை = கிளை, கொம்பு = கிளையில் வளரும் சிறுசிறு கொம்புகள்.
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. |
14 |
காட்டிலே மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழிதன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்துகொண்டு, தன் பொலிவு இல்லாத சிறகுகளை விரித்துஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்தவன் பாட்டைக் கேட்டுப் பழகிக்கொண்டு பாடுவது. (கற்றவன் பாடலுக்கு உரிய ஆழ்ந்த பொருளைச் சொல்ல முடியும். கல்லாதவன் சொல்லமுடியுமா)
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். |
15 |
மருத்துவன் வேங்கை வரிப்புலிக்கு மருத்துவம் பார்த்தான். குணம் பெற்ற புலி அதன் இயல்பால் அந்த மருத்துவனை அடித்துத் தின்றுவிட்டது. நன்னடத்தைப் பாங்குகளை அறியாத அற்பப் புத்து உடைய ஒருவனுக்கு உதவி செய்தால் அந்த மருத்துவன் அடைந்த நிலைதான் கிட்டும். கல்லின் மேல் விழுந்த மண்பாண்டம் போல, செய்த உதவி சின்னாப் பின்னம் ஆகிவிடும்.