உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து விளையுமோ தான். |
6 |
கல்லால் ஆன தூணின் மேல் அது தாங்கமுடியாத அளவு பெரிய பாரத்தை ஏற்றினால் கற்றூணானது பிளந்து நொறுங்கிப் போகுமே அல்லாமல் வளைந்து கொடுக்காது. அரசனுக்காக உயிரையே தரும் பண்புள்ளவர்கள் அரசனின் பகைவரை எதிர்கொள்ளும்போது பணிந்துபோவார்களா? கற்றூண் போன்றவர்கள் அல்லவா?
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம். |
7 |
நீரில் பூத்திருக்கும் ஆம்பல் பூ நீர்மட்டத்திலேயே இருக்கும். (நீர் உயர்ந்தால் உயரும். நீர் தாழ்ந்தால் தாழும்.) அதுபோல ஒருவரது அறிவு அவர் கற்ற நூலினது அளவாக இருக்கும். அதுபோல முந்தைய பிறவியில் எந்த அளவு நற்பணி செய்து தவப்பயன் பெற்றிருக்கிறார்களோ அந்த அளவு இந்தப் பிறவியில் செல்வத்தின் அளவு இருக்கும். குணம் பெற்றெடுத்த தாய் தந்தையரைப் பொருத்தே இருக்கும்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. |
8 |
நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது. நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது.
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. |
9 |
தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது. யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. |
10 |
நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான்.