வேலூர்க்கலகம் தோல்வியடைந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் தோன்றிய சிப்பாய்களின் எதிர்ப்புகளுக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்தது. 18ஆம் நூற்றாண்டு குறுகிய ஆட்சியாளர்களின் எதிர்ப்புக்கு பெயர் பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் முதல் அறுபது ஆண்டுகள் சிப்பாய்களின் எதிர்ப்பை பிரிட்டிஷார் சந்தித்தனர்.
வேலூர்க்கலகம் 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்கு வழிவகுத்தது என்ற கூற்றை கே.கே. பிள்ளை என்ற வரலாற்று ஆசிரியர் மறுக்கிறார். 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகின்றார். இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்று என். சஞ்சீவி கூறியுள்ளார். காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர்க் கலகம் என்று கே. ராசய்யன் என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார்.