குஷாண மரபில் சிறப்புமிக்க ஆட்சியாளர் கனிஷ்கர். கி.பி. 78 ஆம் ஆண்டு தொடங்கும் சாக சகாப்தத்தை அவர் நிறுவினார். அவர் ஒரு பெரும் படையெடுப்பாளர் மட்டுமல்ல, சமயம் மற்றும் கலையைப் போற்றுபவராகவும் திகழ்ந்தார்.
கனிஷ்கரின் படையெடுப்புகள்
கனிஷ்கர் ஆட்சிக்கு வந்தபோது அவரது பேரரசில் ஆப்கானிஸ்தான், காந்தாரம், சிந்து, பஞ்சாப் ஆகிய பகுதிகள் இருந்தன. பின்னர் அவர் மகதத்தைக் கைப்பற்றி பாடலிபுத்திரம், புத்தகயா வரை முன்னேறிச் சென்றார். கல்ஹணரின் கூற்றுப்படி களிஷ்கர் காஷ்மீர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார் என்பது தெளிவு. மதுரா, ஸ்ராவஸ்தி, கோசாம்பி, பெனாரஸ் போன்ற விடங்களில் அவரது நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. எனவே, கங்கைச் சமவெளியின் பெரும்பகுதி அவரது ஆட்சிக்குட்பட்டிருத்தல் வேண்டும்.
![]() |
கனிஷ்கர் |
கனிஷ்கரின் பேரரக மிகவும் பரந்த ஒன்றாகும். மேற்கில் காந்தாரம் தொடங்கி கிழக்கே பனாரஸ் வரையிலும், வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் அவரது பேரரசு பரவியிருந்தது. தற்காலத்தில் பெஷாவர் என்றழைக்கப்படும் புருஷபுரம் என்பது அவரது தலைநகர். அவரது பேரரசில் மற்றொரு சிறப்புமிக்க நகரமாக மதுரா திகழ்ந்தது.
கனிஷ்கரும் புத்த சமயமும்
![]() |
கனிஷ்கர் சிலை |
புதிய சமயத்தை பரப்பும் நோக்கத்தோடு கனிஷ்கர் மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சமயப்பரப்பு குழுக்களை அனுப்பி வைத்தார். பல்வேறு இடங்களில் புத்த சைத்தியங்களும் விஹாரங்களும் கட்டப்பட்டன. வசுமித்திரர், அசுவகோஷர், நாகர்ஜினர் போன்ற புத்தசமய அறிஞர்களையும் கனிஷ்கர் ஆதரித்தார். புத்த சமயத்திலும் கோட்பாட்டிலும் எழுந்த பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு கனிஷ்கர் நான்காவது புத்த சமய மாநாட்டைக் கூட்டினார். வசுமித்திரர் தலைமையில், காஷ்மீர் மாகாணம் ஸ்ரீநகருக்கு அருகிளிருந்த குண்டலவன மடாலயத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுமார் 500 துறவிகள் இதில் பங்குகொண்டனர். திரிபீடங்களுக்கு அதிகாரபூர்வமான விளக்கவுரை இந்த மாநாட்டில் இறுதி வடிவம் பெற்றது. மகாயான கோட்பாடுகள் முழுவடிவம் பெற்றன. இம்மாநாட்டில் பங்கு பெற்ற அசுவகோஷர் ஒரு தத்துவஞானி, கவிஞர் மற்றும் நாடகாசிரியர். புத்தசரிதத்தின் ஆசிரியர். தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகார்ஜினர் கனிஷ்கரின் அவையில் இடம் பெற்றிருந்தார். பண்டைய இந்தியாவின் புகழ்மிக்க மருத்துவரான சரகர் என்பவரையும் கனிஷ்கர் ஆதரித்தார்.