சுங்கர்கள்
மௌரியர்களின் படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ரசுங்கன் என்பவரால் சுங்க வம்சம் நிறுவப்பட்டது. மௌரிய வம்சத்தின் கடைசி அரசரைச் கொன்றுவிட்டு அவர் அரியணையைக் கைப்பற்றினார். வடமேற்கு இந்தியாவில் படையெடுத்த வந்த பாக்டிரிய கிரேக்கர்களிடமிருந்து வட இந்தியாவை பாதுகாப்பதே சுங்க ஆட்சிக்கு அப்போது பெரும் சவாலாக இருந்தது. கிரேக்கர்கள் பாடலிபுத்திரம் வரை வந்து அந்த நகரையும் சிலகாலம் ஆக்ரமித்துக் கொண்டனர். இருப்பினும், புஷ்யமித்ர சுங்கர் விரைந்து செயல்பட்டு இழந்த பகுதிகளை உடனே மீட்டார். வட இந்தியாவின்மீது படையெடுத்த களிங்க நாட்டுக் காரவேலனையும் எதிர்த்து அவர் போரிட்டார்.
புஷ்யமித்ரசுங்கன் |
புஷ்யமித்ர சுங்கனுக்குப் பின்னர் அவரது புதல்வன் அக்னிமித்ரன் ஆட்சிக்கு வந்தான். சுங்க வம்சத்தின் கடைசி அரசன் தேவபூதி. அவனது அமைச்சரான வாசுதேவ கன்வன் என்பவரால் தேவபூதி கொல்லப்பட்டார். கன்வ வம்சம் நிறுவப்பட்டது. அது 45 ஆண்டுகள் நீடித்தது. கன்வர்களின் வீழ்ச்சியிலிருந்து குப்தப்பேரரசு நிறுவப்படும் காலம் வரை மகதத்தின் வரலாறு வெற்றிடமாகவே இருந்தது எனலாம்.
கங்கைச் சமவெளியை அயலவர் படையெடுப்பிலிருந்து காப்பாற்றிய விதத்தில் சுங்கர்களின் ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது. பண்பாட்டு ரீதியாக நோக்கினால், பிராமண சமயத்தையும், குதிரை வேள்வியையும் சுங்கர்கள் புதுப்பித்தனர். வைணவ சமயத்தையும் வடமொழியையும் சுங்கர்கள் போற்றி வளர்த்தனர். சுருக்கமாகக் கூறினால் சுங்கர்களின் ஆட்சி வரப்போகும் குப்தர்களின் பொற்கால ஆட்சிக்கு கட்டியம் கூறுவதுபோல அமைந்தது.