வில்லியம் பென்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் செய்வதற்கு மெக்காலே பிரபு தலைமையில் அவர் குழுவை நியமித்தார். தனது அறிக்கையில், ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று மெக்காலே வலியுறுத்தினார். இந்த பரிந்துரையை வில்லியம் பெண்டிங் முழுமனதுடன் ஏற்றார். 1835 ஆம் ஆண்டு அரசின் தீர்மானம் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தது. அதே ஆண்டில் பெண்டிங் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
வில்லியம் பென்டிங் பற்றிய மதிப்பீடு
வில்லியம் பெண்டிங் நேர்மையான விருப்பு வெறுப்பற்ற தாராள குணமுடைய, பகுத்தறிவுள்ள மனிதராகத் திகழ்ந்தார். சதி ஒழிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்பு போன்ற தனது சமூக சீர்திருத்தங்கள் மூலம் இந்து சமுதாயத்தில் காலம் காலமாக நிலவி வந்த கொடுமைகளை ஒழித்துக் கட்டினார். மற்றவர்கள் சொல்லால் மட்டும் கூறிவந்ததை பெண்டிங் தமது செயலால் நடத்திக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சதி ஒழிப்பு குறித்த அரசு தீர்மானத்தை நிறைவேற்றும் போது தனது பதவிக்கு ஆபத்து வருவதைக்கூட அவர் பொருட்படுத்த வில்லை. அத்தகைய மனோதிடமும் நேர்மையும் அக்காலத்திய ஆட்சியாளர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. அவரது கல்வி சீர்திருத்தங்களால் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்தது எனலாம்.
வில்லியம் பென்டிங்கைத் தொடர்ந்து ஆக்லந்து பிரபு (1836 - 42) தலைமை ஆளுநராக பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் முதல் ஆப்கானியப் போர் (1836-42) நடைபெற்றது. அவரது ஆப்கானியக் கொள்கை தோல்வியடையவே, பதவியிலிருந்து 1842ல் திருப்பியழைக்கப்பட்டார். பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற எல்லன்பரோ பிரபு ஆப்கானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். சிந்துப் பகுதியை அவர் இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹார்டிஞ்ச் பிரபு (1844-48) காலத்தில் முதல் ஆங்கிலேய - சீக்கியப் போர் நடைபெற்றது. லாகூர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.