சமயப் பரப்பாளர்களாலும், பிறராலும் தாய்மொழிக் கல்விக் கூடங்கள் அமைக்கப்படுவதை ஹேஸ்டிங்ஸ் பிரபு ஊக்குவித்தார். ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக கல்கத்தாவில் பொது மக்களால் இந்துக் கல்லூரி 1817ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் புரவலராக ஹேஸ்டிங்ஸ் பிரபு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரத்தை அவர் ஊக்குவித்தார். 1799ல் கொண்டுவரப்பட்ட தணிக்கை முறையை அவர் ரத்துசெய்தார். 1816ல் சீராம்பூர் சமயப்பரப்பாளரான மார்ஷ்மேன் என்பவரால் 'சமாச்சார் தர்பன்' என்ற வங்காளமொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது.
ஹேஸ்டிங்ஸ் பிரபு பற்றிய மதிப்பீடு
ஹேஸ்டிங்ஸ் பிரபு சிறந்த படைவீரராகவும் திறமைமிக்க ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். கல்வி, பத்திரிக்கை போன்ற துறைகளில் அவரது தாராளக்கொள்கை பாராட்டத்தக்கது. அவர், பிண்டாரிகளை ஒடுக்கினார். மராட்டியரை வீழ்த்தினார். கூர்க்காக்களின் கொட்டத்தை நசுக்கினார்.
அவர் கைப்பற்றிய நிலப்பகுதிகளால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலுவடைந்தது. பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் என்று அவர் போற்றப்பட்டார். வெல்லெஸ்லி பெற்ற வெற்றிகளை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தியவர் ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றால் மிகையாகாது.
ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்குப்பின் ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1823 - 1828) ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். அப்போது முதல் ஆங்கிலேய பர்மியப் போர் நடைபெற்றது.