1813 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் பிரபு தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். ஆதிக்கக் கொள்கையை தீவிரமாக பின்பற்றிய அவர் பல போர்களில் ஈடுபட்டார். அவரது தீவிர மற்றும் பேரரசுக் கொள்கைகள் பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கத்திற்கு வித்திட்டன. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் இவரேயாகும்.
ஹேஸ்டிங்ஸ் பிரபு |
கூர்க்காவினருக்கு எதிரான போர் (1814 - 1816)
1768ல் நேபாளம் ஒரு வலிமை மிக்க கூர்க்கா அரசாக எழுச்சி பெற்றது. இந்தியாவின் வடக்கிலிருந்த நேபாளம் சீனாவை வடக்கிலும் வங்காளத்தை கிழக்கிலும் அயோத்தியை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. 1801 ஆம் ஆண்டு அயோத்தி நவாப்பிடமிருந்து கோரக்பூர், பாஸ்தி மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்றனர். இதனால் பிரிட்டிஷ் ஆட்சியின் எல்லை நேபாளம் வரை விரிவடைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில் கூர்க்காக்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் போருக்கு இட்டுச் சென்றது. 1814 ஆம் ஆண்டு மே மாதம் கூர்க்காக்கள் பிரிட்டிஷ் காவல் நிலையத்தை தாக்கி அங்கிருந்த அதிகாரியையும் 16 காவலர்களையும் கொன்றனர். எனவே, ஹேஸ்டிங்ஸ் நேபாளத்தின்மீது போர் தொடுத்தார், 1814ல் பிரிட்டிஷாருக்கும் கூர்க்காக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இறுதியில் நேபாளப் படையின் திறமைமிக்க படைத்தளபதியான அமர் சிங் தாபா சரணடைந்தார்.