இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கங்கைச் சமவெளியும் பிரம்மபுத்திரா சமவெளியும் ஒன்றிணைகின்றன. இமய மலைகளுக்கு அப்பால் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி திபெத் வழியாகப் பாய்ந்து இந்தியாவின் வடகிழக்குச் சமவெளியை அடைகிறது. சமவெளியில் மெள்ள ஊர்ந்து செல்லும் இந்நதியின் பரப்பு மிகவும் விரிவடைந்திருப்பதோடு, பல தீவுகளையும் கொண்டுள்ளது.
நகரமையங்கள் உருவாவதற்கு இந்தோ - கங்கைச் சமவெளி பெரும்பங்காற்றியுள்ளது. குறிப்பாக நதிக்கரைகளிலும், இரு நதிகள் ஒன்று சேருமிடத்திலும் இத்தகைய நகரமையங்கள் தோன்றி வளர்ந்தன. சிந்து சமவெளியில் ஹரப்பா பண்பாடு செழித்தோங்கியது. கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் வேதகாலப் பண்பாடு சிறந்து விளங்கியது. பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, பாடலிபுத்திரம் போன்றவை கங்சைச் சமவெளியில் தோன்றி வளர்ந்த முக்கிய நகரங்களாகும். கங்கை நதியுடன் சோன் ஆறு கலக்கும் இடத்தில் பாடலிபுத்திர நகரம் அமைந்திருந்தது. பண்டைக் காலத்தில், மௌரியர்கள், சுங்கர்கள், குப்தர்கள் போன்ற பேரரசுகளின் தலைநகராக பாடலிபுத்திரம் விளங்கியது.
![]() |
கங்கைச் சமவெளி |
மேலும், இப்பகுதியில் பாயும் நதிகளும், கால்வாய்களும் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்பட்டன. பண்டைக் காலத்தில் சாலைகள் அமைப்பது கடினமாக இருந்தது. எனவே பயணிகளும், வணிகர்களும் படகுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தினர். ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு ஆட்சிக்காலம் வரை படகுப் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று விளங்கியது.