அதிகாரம் 21
2 அனைவரும் சீலோவில் இருந்த கடவுளின் ஆலயத்துக்கு வந்து மாலை வரை அவர் திருமுன் அமர்ந்து உரத்த சத்தமாய் ஓலமிட்டு அழுதனர்.
3 இஸ்ராயேலிலிருந்து ஒரு கோத்திரம் இன்று எடுபட்டுவிட்டதே. அப்படிப்பட்ட தீய நிகழ்ச்சி உம் மக்களுக்கு நேரிட்டது ஏன்?" என்று முறையிட்டனர்.
4 மறுநாள் அதிகாலையில் எழுந்து பீடம் எழுப்பித் தகனப்பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
5 அப்போது அவர்கள், "இஸ்ராயேலின் கோத்திரத்தார் அனைவரிலும் ஆண்டவரின் படையோடு வராதவன் யார்?" என்றனர். ஏனெனில் அவ்வாறு வராதவர்களைக் கொல்வது என்று மாஸ்பாவில் ஆணையிட்டுக் கூறியிருந்தனர்.
6 பிறகு தம் சகோதரனாகிய பெஞ்சமினை நினைத்து மனம் கசிந்து, "இஸ்ராயேலின் ஒரு கோத்திரம் அறுபட்டுப் போயிற்றே" என்றும், "இனி அவர்களுக்கு மனைவியாகப் பெண்கள் எங்கே கிடைக்கும்?
7 நாம் ஒவ்வொருவரும் நம் புதல்விகளைக் கொடுப்பதில்லை என்று பொதுவில் சத்தியம் செய்து கொண்டோமே" என்றும் மனம் வருந்திக் கூறினார்.
8 மீண்டும் "இஸ்ராயேலின் கோத்திரத்தார் அனைவரிலும் மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் வராதவர் யார்?" என்று கேட்ட பொழுது, காலாது நாட்டு ஜாபேஸ் நகரத்தார் படையில் சேரவில்லை என்று கண்டனர்.
9 சீலோவில் அவர்கள் இருந்த காலத்தில் அவர்களில் ஒருவரும் அவ்விடம் இருக்கவில்லை.
10 எனவே, வலிமை மிக்கவர்களில் பதினாயிரம் பேரை அனுப்பி, "நீங்கள் போய் காலாது நாட்டு ஜாபேஸ் நகரத்தாரையும் அவர்கள் மனைவி, மக்களையும் வாளால் வெட்டுங்கள்.
11 ஆனால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதாவது: எல்லா ஆண்களையும், மனிதனை அறிந்த எல்லாப் பெண்களையும் வெட்டிவிட்டுக் கன்னிப் பெண்களை மட்டும் காப்பாற்ற வேண்டும்" என்று அவர்களுக்குக் கூறினர்.
12 அவர்கள் காலாதிலுள்ள ஜாபேஸில் மனிதனை அறியாத நானூறு கன்னிப் பெண்களைக் கண்டு பிடித்து அவர்களைக் கானான் நாட்டுச் சிலோவிலிருந்த பாளையத்திற்குக் கொண்டு வந்தனர்.
13 பிறகு அவர்கள் ரெம்மோன் பாறையில் இருந்த பெஞ்சமின் மக்களுக்குத் தூதரை அனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு பணித்தனர்.
14 எனவே பெஞ்சமினர் திரும்பி வந்தனர்@ காலாதிலுள்ள ஜாபேஸிலிருந்து வந்திருந்த பெண்களைத் தங்கள் மனைவிகளாகக் கொண்டனர். இவ்வாறு அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேறு பெண்கள் கிடைக்கவேயில்லை.
15 இஸ்ராயேலர் அனைவரும் இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் இப்படி அழிக்கப்பட்டதே என்று மனம் வருந்தித் தவம் இருந்தனர்.
16 பிறகு மக்களின் மூப்பர், "பெஞ்சமின் பெண்டீர் அனைவரும் ஒரே நாளில் கொல்லப்பட்டனரே@ பெண்கள் இல்லாத எஞ்சிய மனிதருக்கு நாம் என்ன செய்யலாம்?
17 இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடி நாம் மிகவும் முயன்று கருத்தாய்க் கவனிக்க வேண்டும்.
18 நம் சொந்தப் புதல்வியருள் எவரையும் பெஞ்சமினருக்கு மணமுடித்துக் கொடுக்கமுடியாது. ஏனெனில் அவர்களுக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன் என்று நாமே சபித்து ஆணையிட்டிருக்கிறோம்" என்று கூறினர்.
19 இறுதியில் அவர்கள் ஆலோசனை செய்து, "இதோ பேத்தல் நகருக்குத் தெற்கிலும் பேத்தலினின்று சிக்கேமுக்குப் போகிற வழிக்குக் கிழக்கிலும் லெபோனா நகருக்கு மேற்கிலும் இருக்கிற சீலோவிலே ஆண்டவரின் ஆண்டுவிழா கொண்டாடப் படுகிறது" என்று கூறினர்.
20 பெஞ்சமின் மக்களுக்கு, "நீங்கள் போய்த் திராட்சைத் தோட்டங்களில் பதுங்கியிருந்து,
21 சீலோவின் புதல்விகள் தம் வழக்கப்படி நடனமாட வருவதை நீங்கள் காணும் போது, திடீரென்று திராட்சைத் தோட்டங்களிலிருந்து பாய்ந்து, ஆளுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் பெஞ்சமின் நாட்டுக்குக் கொண்டு போங்கள்.
22 பிறகு அவர்கள் தந்தையரோ சகோதரரோ எம்மிடம் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி, "சண்டையிடுபவரைப் போலவும் வெற்றி அடைந்தவரைப் போலவும் அவர்கள் உங்கள் பெண்களைக் கொண்டு போகவில்லை. எனவே, நீங்கள் அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். அவர்கள் உங்களிடம் பெண் கேட்டும் நீங்கள் கொடுக்க மறுத்தீர்கள்@ அது நீங்கள் புரிந்த குற்றம் அன்றோ? என்று சொல்லுவோம்" என்று கூறினர்.
23 பெஞ்சமின் புதல்வர் அவ்வாறே செய்தனர், நடனமாட வந்த பெண்களில் ஆளுக்கு ஒரு பெண்ணைப் பிடித்து மனைவியாக்கிக் கொண்டு அவர்கள் தம் சொந்த நாட்டுக்குப் போய் நகர்களைப் புதிதாய்க் கட்டி எழுப்பி அவற்றில் வாழ்ந்து வந்தனர்.
24 இஸ்ராயேல் மக்களும் அவரவர் கோத்திரத்திற்கும் குடும்பத்திற்கும் தகுந்தபடி தம் கூடாரங்களுக்குத் திரும்பினர். அக்காலத்தில் இஸ்ராயேலில் அரசன் இல்லை@ ஆனால் ஒவ்வொருவனும் தனக்கு நேர்மையாகத் தோன்றினபடி நடந்து வந்தான்.