அதிகாரம் 20
2 மக்கட் தலைவர்களும் இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களும் இறைமக்களின் சபையாக ஒன்று கூடினர். அங்கு நான்கு இலட்சம் காலாட்படை வீரர் இருந்தனர்.
3 இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவிற்கு வந்திருப்பது பெஞ்சமின் மக்களுக்கு எட்டியது, கொல்லப்பட்டவளின் கணவனான லேவியனிடம், "அப்பெரிய கொடுமை எவ்வாறு நடந்தது?" என்று கேட்டனர்.
4 அதற்கு அவன், "நானும் என் வைப்பாட்டியும் பெஞ்சமின் நாட்டுக் காபாவில் இரவிலே தங்கியிருந்தோம்.
5 அவ்வூர் மனிதரில் பலர் வந்து நான் தங்கியிருந்த வீட்டை வளைத்து என்னைக் கொல்லத் தேடினதோடு கட்டுக்கடங்காக் காமவெறி கொண்டு என் வைப்பாட்டியைப் பங்கப்படுத்தினர். அதனால் அவள் இறந்தாள்.
6 அப்போது நான் அவளை எடுத்துப் போய்த் துண்டு துண்டாக வெட்டி உங்கள் நாடுகள் எங்கும் அனுப்பினேன். ஏனெனில் இவ்விதக் கொடுமையும் இத்தகு மாபாவமும் இஸ்ராயேலில் ஒருபோதும் செய்யப்பட்டதில்லை.
7 இஸ்ராயேல் மக்களே, இதோ நீங்கள் அனைவரும் இங்கு இருக்கின்றீர்கள்@ செய்ய வேண்டியது என்ன என்று முடிவு செய்யுங்கள்" என்றான்.
8 அப்போது மக்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து, "நம்மில் எவனும் தன் கூடாரத்திற்குப் போகவும், தன் வீட்டில் நுழையவும் கூடாது.
9 ஆனால், காபாவுக்கு எதிராய் நாம் செய்யப் போவதாவது:
10 பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்த காபா நகரத்தார் செய்த இழிசெயலுக்குத் தகுந்தபடி, நாம் அவர்கள் மேல் பாய்ந்து வேண்டிய அளவு போரிட்டுக் கண்டிப்போம். அவ்விதப் போருக்குச் சாதகமாக, படைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரும்படி இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரத்திலும் நூற்றுக்குப் பத்தும், ஆயிரத்துக்கு நூறும், பதினொரயிரத்துக்கு ஆயிரம் பேருமாகத் தேர்ந்து கொள்வோம்" என்றனர்.
11 அவ்வாறே இஸ்ராயேலர் அனைவரும் ஒன்று போல் ஒரே மனமும் சிந்தனையுமாய் அந்நகருக்கு எதிராய் எழுந்தனர்.
12 பிறகு அவர்கள் பெஞ்சமின் கோத்திரம் எங்கும் தூதரை அனுப்பி, "வெறுப்புக்குரிய இவ்வித இழிசெயல் உங்கள் நடுவில் நடந்தது ஏன்?
13 இக் கொடும் பழியைச் செய்த காபா மனிதரை நாங்கள் கொன்று இஸ்ராயேலினின்று இப்பழி நீங்கும்படி அவர்களை எங்கள் கையில் ஒப்படையுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள். அவர்களோ தம் சகோதரர்களான இஸ்ராயேல் மக்களின் கட்டளையைக் கேட்க விரும்பவில்லை.
14 தங்கள் சொந்தப் பகுதியின் எல்லா நகர்களிலுமிருந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இஸ்ராயேல் மக்கள் அனைவரோடும் போரிடவும் அவர்கள் காபாவுக்கு வந்தனர்.
15 காபா நகர மக்களைத் தவிர பெஞ்சமின் கோத்திரத்தாரில் வாள் ஏந்தத் தெரிந்தவர் இருபத்தையாயிரம் பேர் இருந்தனர்.
16 காபா நகரத்தாரிலோ, வலக்கையாலும் இடக்கையாலும் போரிடக் கூடிய மாவீரர் எழுநூறு பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் கவண் கல் எறிதலில் எவ்வளவு திறமைச்சாலிகள் என்றால், குறி ஒற்றை மயிர் என்றாலும் கூட, அவர்கள் எறிந்த கல் தப்பாது அக்குறியில் படும்.
17 பெஞ்சமின் புதல்வர் நீங்கலாக இஸ்ராயேலில் வாளேந்திப் போரிடத் தயாராய் இருந்தவர் நான்கு இலட்சம் பேர்.
18 இவர்கள் அனைவரும் எழுந்து சிலோவிலிருந்த கோயிலுக்குப் போனார்கள். அவர்கள் கடவுளை நோக்கி, "பெஞ்சமின் புதல்வருடன் போர் தொடுக்க எம் படையை நடத்திச் செல்பவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "யூதா உங்கள் தலைவனாய் இருக்கட்டும்" என்றார்.
19 உடனே இஸ்ராயேல் மக்கள் அதிகாலையில் எழுந்து புறப்பட்டுக் காபாவுக்கு எதிராகப் பாளையமிறங்கினர்.
20 அவ்விடமிருந்து பெஞ்சமினரோடு போரிட முதலில் நகரை முற்றுகையிட்டனர்.
21 ஆனால் பெஞ்சமின் கோத்திரத்தார் காபாவினின்று வெளிப் போந்து இஸ்ராயேல் மக்களில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.
22 இஸ்ராயேல் மக்கள் தம் வலிமையையும் எண்ணிக்கையையும் நம்பித் திடம் கொண்டு முன்பு தாம் போரிட்ட இடத்திலேயே மீண்டும் போரிட அணிவகுத்து நின்றனர்.
23 ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகப் போய் அவர் முன்னிலையில் இரவு வரை அழுது, "எம் சகோதரனான பெஞ்சமின் மக்களை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டுமா, வேண்டாமா?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "நீங்கள் எழுந்து சென்று போரைத் தொடங்குங்கள்" என்று பணிந்தார்.
24 மறுநாள் இஸ்ராயேல் மக்கள் பெஞ்சமின் புதல்வரை எதிர்த்துப் போரிடத் தயாராயினர்.
25 அப்போது பெஞ்சமின் புதல்வர் காபாவிலிருந்து அவர்களுக்கு எதிராகக் கிளம்பி விரைந்து அவர்கள் மேல் பாய்ந்து பதினெட்டாயிரம் பேரைக் கொன்றனர்.
26 எனவே, இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் கடவுளின் ஆலயத்துக்குச் சென்று அமர்ந்து ஆண்டவர் முன்பாக அழுதனர். அன்று மாலை வரை உண்ணாது தனகப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
27 பிறகு தமது நிலை குறித்து ஆண்டவரைக் கலந்தனர். ஏனெனில் அக்காலத்தில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இருந்தது.
28 ஆரோனின் மகன் எலெயசாரின் புதல்வன் பினேயெசு கோவில் திருப்பணிகளில் தலைமை வகித்து வந்தான். எனவே ஆண்டவரைக் கலந்து அவரை நோக்கி, "எம் சகோதரரான பெஞ்சமின் புதல்வருக்கு எதிராய் இன்னும் போராட வேண்டுமா?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "போங்கள், நாளைக்கு அவர்களை உம் கைகளில் ஒப்படைப்போம்" என்றார்.
29 இஸ்ராயேல் மக்கள் காபா நகரைச் சுற்றிப் பதுங்கியிருந்தனர்.
30 முன்பு இருமுறை செய்ததுபோல் இம்முறையும் பெஞ்சமினருக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.
31 பெஞ்சமின் மக்களோ துணிவுடன் நகரிலிருந்து வெளியேப் போந்து புறமுதுகு காட்டி ஓடின எதிரிகளை வெகுதூரம் துரத்தினர். முதல் நாளும் இரண்டாவது நாளும் செய்தது போல் சிலரைக் காயப்படுத்தி, பேத்தலுக்கும் காபாவுக்கும் போகிற இரு வழிகளிலும் ஓடின இஸ்ராயேலரை வெட்டி ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.
32 வழக்கம்போல் நமக்கு முன்பாகச் சிதறி ஓடுகின்றனர்" என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் தோற்று ஓடுவது போல் பாசாங்கு செய்து பெஞ்சமின் மக்களை நகரிலிருந்து வெளியே கொண்டு வரும்படியாகவும், தப்பி ஓடுவது போல் மேற்கூறப்பட்ட இரு வழிகளிலும் வந்து சேரும்படியாகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
33 அப்போது இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தாங்களிருந்த இடத்திலிருந்து எழுந்து பால்தமார் என்ற இடத்தில் தம் படைகளைப் போருக்கு அணிவகுத்து நின்றனர். நகரைச் சுற்றிலும் பதுங்கியிருந்தவர்கள் சிறிது சிறிதாக வெளியேறவும், நகருக்கு மேற்புறத்தினின்று புறப்படவும் தொடங்கினர்.
34 இஸ்ராயேல் மக்களில் மற்றும் பத்தாயிரம் பேர் நகர் மக்களைப் போரிடத் தூண்டினர். பெஞ்சமின் மக்களோடு கடும் போர் மூண்டது. நான்கு பக்கங்களிலிருந்தும் தமக்கு அழிவு வருகிறது என்று அவர்கள் உணரவில்லை.
35 கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகப் பெஞ்சமின் புதல்வர்களை முறியடிக்க, அன்று அவர்களில் போர்வீரரும் வாளேந்துபவர்களுமான இருபத்தையாயிரத்து நூறு பேர்களைக் கொன்றனர்.
36 தாங்கள் தோல்வி அடைந்து விட்டதைக் கண்ட பெஞ்சமின் மக்கள் புறமுதுகு காட்டி ஓடத்தொடங்கினர். இஸ்ராயேல் மக்களோ அதைக் கண்டு நகர் அருகில் தாம் தயாரித்திருந்த பதிவிடை நோக்கி அவர்களைத் துரத்தினர்.
37 அப்போது பதுங்கியிருந்தோர் தம் மறைவிடங்களினின்று வெளிப்போந்து, பெஞ்சமினர் புறமுதுகு காட்டி ஓடக்கண்டு, நகரில் நுழைந்து அங்கு இருந்தவர்களை வாள் முனையால் வெட்டினர்.
38 இஸ்ராயேல் மக்கள் பதுங்கியிருந்தவருக்கு, "நீங்கள் நகரைப் பிடித்த பிறகு நாற்றிசையிலும் தீ மூட்டுங்கள். புகை உயர எழும்புவதைக் கண்டு நகர் பிடிபட்டதாக நாங்கள் அறிவோம்" என்று அடையாளம் சொல்லியிருந்தனர்.
39 பெஞ்சமினர் இஸ்ராயேலரில், முப்பது பேரைக் கொன்ற பிறகு, இஸ்ராயேலின் சேனை சிதறி ஓட்டம் பிடித்ததை எண்ணி அவர்களை விரைந்து துரத்தினது ஒரு புறமிருக்க, களத்தில் போரிட்ட இஸ்ராயேலர், புகை தூண்போல் உயரக் கிளம்பவுதைக் கண்டனர்.
40 பெஞ்சமினரோ தலையைத் திருப்பித் தீச்சுவாலையைக் கண்டு தம் நகர் பிடிபட்டது என்று அறிந்து கொண்டனர்.
41 அப்போது இஸ்ராயேலர் சேனையில் பாசாங்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தவர்கள் திரும்பி உறுதியோடு எதிரிகளின் மேல் பாய்ந்தனர். அதைக் கண்ட பெஞ்சமினர் புறமுதுகு காட்டி, பாலைவனத்தை நோக்கி ஓடத் தொடங்கினர்.
42 அப்போது ஒருபக்கத்தில் இஸ்ராயேல் சேனை தம்மை நெருக்கி வரவும் மறுபக்கத்தில் நகரைத் தீக்கு இரையாக்கியவர்கள் தமக்கு எதிராக ஓடிவருவதையும் கண்டு அவர்கள் திகைத்து நின்றனர்.
43 இவ்வாறு எதிரிகளின் இரு சேனைகளுக்கு இடையே அகப்பட்ட பெஞ்சமினர் இரு மருங்கிலும் வெட்டுண்டனர். வெட்டுவதைத் தடுக்க எவனும் இல்லை. எல்லாரும் காபா நகரின் கீழ்ப்புறத்தில் விழுந்து மடிந்தனர்.
44 அவ்விடத்தில் கொல்லப்பட்ட பெஞ்சமினர் பதினெட்டாயிரம் பேர். அவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்த வீரருங்கூட.
45 பெஞ்சமின் வம்சத்தில் எஞ்சியவர் இதைக் கண்டு பாலை வனத்துக்கு ஓடி ரெம்மோன் என்று அழைக்கப் பெற்ற பாறையை அடைந்தனர். இப்படி ஓடியதில் பலர் பற்பலவிடங்களில் சிதறுண்டு போனதால், ஐயாயிரம் பேர் இஸ்ராயேல் மக்களால் கொல்லப்பட்டனர். இன்னும் எஞ்சியோர் ஓடிப்போக முயலும் போது இஸ்ராயேலர் அவர்களைத் துரத்தி மேலும் இரண்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர்.
46 எனவே, அன்று பெஞ்சமின் கோத்திரத்தில் மடிந்தவர் இருபத்தையாயிரம் பேர். அவர்கள் அனைவரும் போரில் திறமை மிக்க வீரர்கள்.
47 பெஞ்சமின் கோத்திரத்தில் தப்பிப் பாலைவனத்துக்கு ஓடிப்போனவர்கள் அறுநூறு பேர். இவர்கள் ரெம்மோன் பறையில் நான்கு மாதம் தங்கினர்.
48 இஸ்ராயேலர் திரும்பிவந்து நகரில் மனிதர் முதல் விலங்கு வரை கண்டதனைத்தையும் வாளால் வெட்டிப் பெஞ்சமினுடைய நகர்கள் ஊர்கள் அனைத்தையும் தீக்கி இரையாக்கினர்.