அதிகாரம் 8
2 இறைப்பற்றுடையோர் சிலர் முடியப்பரை அடக்கம் செய்து அவருக்காகப் பெரிதும் துக்கம் கொண்டாடினர்.
3 சவுலோவென்றால் திருச்சபையை ஒழிக்க முயன்றார். வீடு வீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டு போய்ச் சிறையில் தள்ளினார்.
4 சிதறுண்டுபோனவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்தனர்.
5 பிலிப்பு சமாரியா நகருக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கு மெசியாவை அறிவித்தார்.
6 பிலிப்பு செய்த அருங்குறிகளை மக்கள் கண்டபோது அல்லது அவற்றைக் குறித்துக் கேள்வியுற்றபோது, ஒருமனதாய்த் திரண்டு வந்து, அவர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்டனர்.
7 பேய் பிடித்திருந்த பலரிடமிருந்து அசுத்த ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. திமிர்வாதக்காரர், முடவர் பலர் குணமடைந்தனர்.
8 இதனால் அந்நகரில் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
9 அந்நகரில் சீமோன் என்னும் ஒருவன் இருந்தான். அவன் மந்திரங்கள் செய்து சமாரியா மக்களை மயக்கித் தான் ஒரு பெரிய மனிதனெனக் காட்டிக்கொண்டு வந்தான்.
10 மாபெரும் சக்தி எனும் கடவுளின் வல்லமை இவனே என்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும், அவன் சொல்வதை விரும்பிக் கேட்டனர்.
11 இப்படிக் கேட்டு வந்தது, அவன் தன் மாய வித்தைகளால் நெடுநாளாக அவர்களை மயக்கி வந்ததால்தான்.
12 ஆனால், பிலிப்பு கடவுளின் அரசைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறித்தும் நற்செய்தி அறிவித்தபோது, ஆண்களும் பெண்களும் அவர் கூறியதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.
13 அப்பொழுது சீமோனும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றான். பெற்றபின் பிலிப்புவோடு கூடவே இருந்து அவர் செய்த அருங்குறிகளையும் அரிய புதுமைகளையும் கண்டு திகைத்து நின்றான்.
14 கடவுளின் வார்த்தையைச் சமாரியர் ஏற்றுக்கொண்டதை யெருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, இராயப்பரையும் அருளப்பரையும் அவர்களிடம் அனுப்பினர்.
15 அவர்கள் போய், சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்காக வேண்டினர்.
16 ஏனெனில், அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்.
17 ஆதலின், அப்போஸ்தலர்கள் அவர்கள்மீது கைகளை விரிக்கவே, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.
18 அப்போஸ்தலர்கள் கைகளை விரிப்பதால் பரிசுத்த ஆவி அளிக்கப் பெறுவதைக்கண்ட சீமோன்,
19 "எவன்மீது கைகளை விரிப்பேனோ, அவன் பரிசுத்த ஆவியை அடைந்துகொள்ளுமாறு எனக்கும் அந்த வல்லமையைக் கொடுங்கள்" என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்கப்போனான்.
20 இராயப்பரோ அவனை நோக்கி, "உன் பணத்தோடு நீயும் நாசமாய்ப் போ@ பணத்தைக் கொடுத்துக் கடவுளின் கொடையையா வாங்க நினைத்தாய்?
21 இதில் உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஏனெனில், கடவுள்முன் உன் உள்ளம் நேர்மையற்றது.
22 உனது தீயபோக்கை விட்டு, மனம் திரும்பி, ஆண்டவரை மன்றாடு@ உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் ஒரு வேளை மன்னிக்கப்படலாம்.
23 ஏனெனில், பிச்சுப் போன்ற கசப்பால் உன் உள்ளம் நிறைந்து, பாவத்திற்கு நீ அடிமையாய் இருக்கக் காண்கிறேன்" என்றார்.
24 அதற்குச் சீமோன், "நீங்கள் சொன்ன கேடு எதுவும் எனக்கு நேராதபடி ஆண்டவரிடம் எனக்காக மன்றாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
25 இவ்வாறு ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து, அதற்குச் சான்று பகன்ற பின், அப்போஸ்தலர் யெருசலேமிற்குத் திரும்பினர். வழியில் சமாரியா நாட்டின் பல ஊர்களில் நற்செய்தி அறிவித்தனர்.
26 ஒருநாள், ஆண்டவரின் தூதர் பிலிப்புவிடம், "யெருசலேமிலிருந்து காசா ஊருக்குப்போகும் சாலை வழியாய்த் தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் செல்" என்றார். இச்சாலை இன்று ஆள் நடமாட்டமற்றது. பிலிப்பு புறப்பட்டுச் சென்றார்.
27 எத்தியோப்பிய அரசியான காந்தாக்கே என்பவளின் மேலலுவலன் ஒருவன் இறைவனை வழிபட யெருசலேமிற்குச் சென்றிருந்தான்.
28 அவன் ஓர் அண்ணகன். அவ்வரசியின் பொருளமைச்சன். அவன் தனது ஊர் திரும்புகையில் தேரில் உட்கார்ந்து, இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படித்துக்கொண்டிருந்தான்.
29 "தேரை அணுகி அதன் கூடவே போ" என்று ஆவியானவர் பிலிப்புவிடம் சொன்னார்.
30 பிலிப்பு விரைந்து ஓடி, அதை நெருங்கியபோது, அவன் இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படிப்பதைக் கேட்டு, "படிப்பதன் பொருள் உமக்கு விளங்குகிறதா?" என்று வினவினார்.
31 அதற்கு அவன், "யாராவது எடுத்துச் சொன்னாலொழிய எப்படி விளங்கும்?" என்று சொல்லி, தேரில் ஏறி தன்னுடன் உட்காரும்படி பிலிப்புவை அழைத்தான்.
32 அப்போது அவன் படித்துக்கொண்டிருந்த மறைநூலின் பகுதி பின்வருமாறு: ~ செம்மறிபோலக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்பட்டார். உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத ஆட்டுக்குட்டி போல், அவர் வாய் திறக்கவில்லை.
33 தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவரது சந்ததியைப் பற்றிச் சொல்லுபவன் யார் ? ஏனெனில், அவரது வாழ்வு இவ்வுலகினின்று எடுபடும். ~
34 அண்ணகன் பிலிப்புவிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறினார்? தன்னைக் குறித்தா? இன்னொருவரைக் குறித்தா? தயவு செய்து சொல்லும்" என்று கேட்டான்.
35 அதற்கு மறுமொழியாக, பிலிப்பு, மேற்சொன்ன மறைநூல் வாக்குகளை வைத்துக் கொண்டு, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்கு அறிவித்தார்.
36 இப்படி அவர்கள் போகும்போது, வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.
37 "இதோ, தண்ணீர் இருக்கிறது. நான் ஞானஸ்நானம் பெறத் தடை என்ன?" என்று கேட்டான் அண்ணகன்.
38 உடனே தேரை நிறுத்தச் சொன்னான். பிலிப்பு, அண்ணகன் இருவருமே தண்ணீரில் இறங்கினர். அவர் அவனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.
39 இருவருமே தண்ணீரை விட்டு வெளியேறினபோது, ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். பின்னர் அண்ணகன் அவரைக் காணவில்லை. மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றான்.
40 பிலிப்புவோ, தாம் அசோத் என்னும் ஊரில் இருப்பதை உணர்ந்தார். பிறகு, சென்ற ஊர்களிலெல்லாம் நற்செய்தி அறிவித்துக் கடைசியாகச் செசரியாவை அடைந்தார்.