அதிகாரம் 7
2 நம் தந்தை ஆபிரகாம், காரான் ஊரில் குடியேறுமுன் மெசொ பொத்தாமியாவில் வாழ்ந்தபோது, மாட்சிமை மிக்க கடவுள் அவருக்குத் தோன்றி,
3 ~உன் நாட்டையும் உறவினரையும் விட்டு நான் உனக்குக் காட்டும் நாட்டிற்குப் போ~ என்றார்.
4 அப்படியே, அவர் கல்தேயருடைய நாட்டினின்று வெளியேறி காரானில் தங்கினார். அவர் தந்தை இறந்தபிறகு, நீங்கள் இப்போது இருக்கும் நாட்டில் கடவுள் அவரைக் குடியேற்றினார்.
5 இந்நாட்டில் கடவுள் அவருக்கு ஓரடி நிலம்கூட உடைமையாகக் கொடுக்கவில்லை. மக்கட்பேறு இல்லாதிருந்தும், அவருக்கும் அவர் வழித்தோன்றியவர்களுக்கும் இந்நாட்டை உரிமையாய்த் தருவதாக வாக்களித்தார்.
6 ~அவர் வழித்தோன்றுபவர் வெளிநாட்டில் குடியிருப்பர். அந்நாட்டினர் அவர்களை நானூறு ஆண்டுகள் அடிமையாக்கிக் கொடுமைப் படுத்துவர்~ என்று கடவுள் கூறினார்.
7 ~ஆனால் அவர்களை அடிமைப்படுத்திய நாட்டினர்மீது தீர்ப்புக் கூறுவேன். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி, இவ்விடத்தில் என்னை வழிபடுவர்~ என்று கடவுள் உரைத்தார்.
8 விருத்தசேதன உடன்படிக்கையை அவருக்கு அருளினார். அதன் படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்று, எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரு குலத் தந்தையரையும் பெற்றனர்.
9 "இக்குலத் தந்தையர்கள் சூசைமேல் பொறாமைகொண்டு எகிப்தில் அடிமையாகும் படி அவரை விற்றனர். ஆனால், கடவுள் அவருக்குத் துணைநின்று, இன்னல்கள் அனைத்தினின்றும் அவரை விடுவித்தார்.
10 ஞானத்தை அவருக்கு அளித்து, எகிப்து நாட்டு மன்னன் பார்வோனின் அன்பைப் பெறச்செய்தார். மன்னன் அவரை எகிப்து நாட்டிற்கும், தன் உடைமை அனைத்திற்கும் அதிகாரியாக்கினான்.
11 அப்பொழுது, எகிப்து, கானான் நாடுகளில் எங்கும் பஞ்சம் ஏற்பட, மக்கள் மிக வேதனையுற்றனர். நம் முன்னோர்களுக்கும் உணவு கிடைக்கவில்லை.
12 எகிப்து நாட்டில் உணவுப் பொருள்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்ட யாக்கோபு நம் முன்னோர்களை அங்கு அனுப்பினார்.
13 அவர்களை இரண்டாம் முறை அனுப்பியபோது, சூசை தாம் யாரென அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் அவருடைய குடும்பத்தைப்பற்றித் தெரியவந்தது.
14 சூசை, தம் தந்தை யாக்கோபையும், தம் சுற்றத்தாரையும் அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினார். இப்படி வந்தவர்கள் மொத்தம் எழுபத்தைந்துபேர்.
15 இவ்வாறு யாக்கோபு எகிப்து நாட்டிற்குப் போனார். அவரும் நம் முன்னோரும் அங்கே இறந்தனர்.
16 அவர்களுடைய உடலைச் சீக்கேம் ஊருக்குக் கொண்டுவந்து, ஏமோர் என்பவரின் மக்களிடமிருந்து ஆபிரகாம் விலை கொடுத்து அவ்வூரில் வாங்கியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
17 "கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுங்காலம் நெருங்கியது. நம் மக்களும் எகிப்தில் பலுகிப்பெருகி வந்தனர்.
18 நாளடைவில் சூசையை அறியாத அரசன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
19 அவன் நம் குலத்தினரை வஞ்சகமாகத் துன்புறுத்தி, நம் முன்னோர் தம் குழந்தைகளை உயிர் பிழைக்க வொட்டாமல் வெளியே போட்டுவிடும்படி செய்தான்.
20 மோயீசன் பிறந்தது அக்காலத்தில்தான். அவர் கடவுளுக்கு உகந்தவராயிருந்தார்.
21 மூன்று மாதம் தந்தை வீட்டிலே வளர்க்கப்பட்டார். பின்பு குழந்தையை வெளியே போட்டுவிடவே, பார்வோனின் மகள் அதை எடுத்து, சொந்த மகனாக வளர்த்தாள்.
22 மோயீசன் எகிப்து நாட்டுக் கல்வி கேள்விகள் அனைத்தையும் கற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.
23 "அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களான இஸ்ராயேல் மக்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
24 அப்பொழுது அவர்களில் ஒருவனை எகிப்தியன் கொடுமைப் படுத்துவதை அவர் கண்டு, சகோதரனுக்குத் துணை நின்று, துன்பப்பட்டவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்று பழிதீர்த்தார்.
25 தம் வழியாய்த் தம் சகோதரர்களுக்குக் கடவுள் மீட்பு அளிக்க விரும்புவதை அவர்கள் உணர்ந்துகொள்வர் என்று நினைத்தார். அவர்களோ உணர்ந்துகொள்ளவில்லை.
26 மறுநாள் அவர்களில் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அவர் எதிர்ப்பட்டு, ~ நண்பர்களே, நீங்கள் சகோதரர்கள் தானே! ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறீர்கள்? ~ என்று சமாதானப்படுத்த முயன்றார்.
27 அயலானுக்குத் தீங்கு செய்தவன், ~ உன்னை எங்களுக்குத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?
28 நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?~ என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.
29 அவன் சொன்னதைக் கேட்டு மோயீசன் அங்கிருந்து ஓடிப்போய், மாதியாம் நாட்டில் தங்கினார். அங்கே அவருக்கு இரு புதல்வர் பிறந்தனர்.
30 " நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாய் மலையருகிலுள்ள பாலை நிலத்தில், எரியும் முட்புதரின் தழலில், வானதூதர் அவருக்குத் தோன்றினார்.
31 அக்காட்சியைக் கண்டு மோயீசன் வியப்புற்றார். அதைக் கூர்ந்து நோக்கநெருங்கிய போது,
32 ~ நானே உங்கள் முன்னோரின் கடவுள். ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள் நானே ~ என ஆண்டவரின் குரலொலி கேட்டது. மோயீசன் நடுநடுங்கி அக்காட்சியை நோக்கத் துணியவில்லை.
33 அப்பொழுது ஆண்டவர், ~ உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு. ஏனெனில், நீ நிற்பது புனிதமான நிலம்.
34 எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணுற்றேன். அவர்களின் அழுகுரலைக் கேட்டேன். அவர்களை மீட்க இறங்கிவந்தேன். இதோ, உன்னை எகிப்துக்கு அனுப்புகிறேன், வா ~ என்றார்.
35 "உன்னைத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?~ என்று முன்பு மறுத்து விட்டார்களே, அந்த மோயீசனையே, தலைவராகவும் மீட்பராகவும் கடவுள் முட்புதரில் தோன்றிய வானதூதரின் வழியாக அனுப்பினார்.
36 எகிப்து நாட்டிலும் செங்கடலிலும், நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்திலும், அற்புதங்களையும் அருங்குறிகளையும் ஆற்றி, அவர்களை வெளியே அழைத்து வந்தவர் இவரே.
37 ~ என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைக் கடவுள் உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழுப்புவார் ~ என்று இஸ்ராயேல் மக்களுக்குச் சொன்னவரும் இந்த மோயீசனே.
38 அவர்களது திருக்கூட்டம் பாலை நிலத்தில் கூடியபோது, சீனாய் மலையில் தம்முடன் பேசிய வான்தூதருக்கும், நம் முன்னோர்க்கும் இடை நின்றவர் இவரே. அங்கே அவர், உயிருள்ள திருமொழிகளை நமக்கு அளிப்பதற்காக, அவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
39 ஆனால், நம் முன்னோர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரைப் புறக்கணித்தனர். அவர்களது உள்ளம் எகிப்தை நினைத்து ஏங்கி நிற்க,
40 ~ எங்களுக்கு முன்செல்லத் தெய்வங்களைச் செய்து, கொடும். ஏனெனில், எங்களை எகிப்து நாட்டினின்று வெளியேற்றிய அந்த மோயீசனுக்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை ~ என்று ஆரோனிடம் சொன்னார்கள்.
41 கன்றுக்குட்டியைச் செய்தது அச்சமயத்தில்தான். அச்சிலைக்குப் பலி செலுத்தினர். தம் கையாலே செய்த உருவத்திற்கு விழாக் கொண்டாடினர்.
42 இதனால் கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்படையை வணங்கும்படி அவர்களைக் கைவிட்டுவிட்டார். இதைப்பற்றி இறைவாக்கினர்கள் நூலில்: இஸ்ராயேல் குலத்தவரே, பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் நீங்கள் எனக்குப் பலிகளும் காணிக்கைகளும் செலுத்தினீர்களா?
43 இல்லை, மோளோக்கின் கூடாரத்தையும், ரெப்பா தெய்வத்தின் விண் மீனையும் சுமந்துகொண்டு போனீர்கள் அன்றோ! இச்சிலைகளை நீங்கள் வணங்குவதற்கெனச் செய்துகொண்டீர்கள்@ ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் கடத்துவேன்~ என்று எழுதியுள்ளது.
44 மோயீசனிடம் பேசிய இறைவன் கட்டளையிட்டபடி பாலை நிலத்தில் நம் முன்னோருக்குச் சாட்சியக் கூடாரம் இருந்தது. தாம் காட்டிய படிவத்திற்கேற்ப அதை மோயீசன் அமைக்க வேண்டுமென்று இறைவன் சொல்லியிருந்தார்.
45 அந்தக் கூடாரம் அடுத்த தலைமுறையில் வந்த நம் முன்னோர் கைக்கு வந்தது. தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த புறவினத்தாரின் நாட்டை நம் மக்கள் யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தனர். தாவீதின் நாள்வரை அது அங்கேயே இருந்தது.
46 கடவுளுக்கு உகந்தவரான தாவீது, யாக்கோபின் கடவுளுக்கு உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக்கொண்டார்.
47 ஆனால் இறைவனுக்கு இல்லம் அமைத்தவர் சாலொமோனே.
48 உன்னதமானவரோ, மனிதர் அமைக்கும் இல்லங்களில் உறைவதில்லை. இறைவாக்கினர் சொல்லியிருப்பது போல:
49 ~வானமே என் அரியணை, வையமே என் கால் மணை. என்ன இல்லம் எனக்குக் கட்டுவீர்கள்? நான் தங்க இடம் ஏது?
50 இவையெல்லாம் அமைத்தது எனது கைத்திறனன்றோ? என்கிறார் ஆண்டவர் ~
51 "திமிர் பிடித்தவர்களே, விருத்தசேதனமில்லாத உள்ளமும் செவியும் படைத்தவர்களே, பரிசுத்த ஆவியை நீங்கள் எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். முன்னோருக்கேற்ற மக்கள் நீங்கள்.
52 இறைவாக்கினர்களுள் யாரைத்தான் உங்கள் முன்னோர் துன்புறுத்தவில்லை? அதுமட்டுமன்று, அவர்கள் நீதிமானுடைய வருகையை முன்னறிவித்தவர்களைக் கொலையும் செய்தனர். இப்போது நீங்கள் அந்த நீதிமானையே காட்டிக்கொடுத்து, கொலை செய்தீர்கள்.
53 வானதூதர்களின் வழியாக நீங்கள் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும் அதைப் பின்பற்றவில்லை."
54 இதைக் கேட்டவர்கள், உள்ளத்தில் கோபம் பொங்க, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தனர்.
55 முடியப்பரோ பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் வானத்தை உற்று நோக்கினார். அப்போது, கடவுளின் மாட்சிமையையும், அவரது வலப் பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
56 "இதோ! வானம் திறந்துள்ளதையும், மனுமகன் கடவுளின் வலப்பக்கம் நிற்பதையும் காண்கிறேன்" என்றார்.
57 அதைக் கேட்டு அவர்கள் எல்லாரும் பெருங் கூக்குரலுடன் காதை மூடிக்கொண்டனர். ஒருமிக்க அவர்மேல் பாய்ந்து,
58 அவரை நகருக்கு வெளியே தள்ளி, அவரைக் கல்லால் எறியத் தொடங்கினர். சாட்சிகள் தங்கள் மேலாடைகளைச் சவுல் என்னும் ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தனர்.
59 அவர்கள் கல் எறிகையில் முடியப்பர், "ஆண்டவராகிய யேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக்கொண்டார்.
60 பிறகு முழங்காலிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்!" என்று சொல்லி உயிர் துறந்தார்.