1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
மிகுந்த அதிகாரங்களைப் பெற்ற மேஜர் பானர்மேன் இந்த படையெடுப்புக்கு தலைமை வகித்தார். 1799 செப்டம்பர் முதல் நாள் கட்டபொம்மனை சரணடையுமாறு அவர் இறுதி எச்சரிக்கை விடுத்தார். 4ம் தேதி பாளையங்கோட்டையில் வந்து சந்திக்குமாறும் கூறினார். நல்ல நாள் பார்த்து விட்டு வருவதாக கட்டபொம்மன் பதில் அனுப்பினார்.
பானர்மேன் இந்த பதிலை அலட்சியப்போக்கு என்று கருதி ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். செப்டம்பர் 5 ஆம் நாள் கட்டபொம்மனின் கோட்டை தாக்கப்பட்டது. 16 ஆம் நாள் பாளையங்கோட்டைக்கு மேலும் தளவாடங்கள் வந்து சேர்ந்தன. கோலார்பட்டியில் நடந்த மோதலில் பாளையக்காரர் படை பலத்த சேதமடைந்தது. சிவசுப்ரமணியபிள்ளை மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பியோடினார். களப்பூர் காடுகளில் பதுங்கியிருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை ஆட்சியாளர் கைப்பற்றி பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.
கட்டபொம்மனின் வீழ்ச்சி
பானர்மேன் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை பாளையக்காரர் கூடியிருந்த சபையின் முன் நிறுத்தி பெயருக்கு ஒரு விசாரணை நடத்தி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். செப்டம்பர் 13 ஆம் நாள் சிவசுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் கூடியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மரணபயம் ஏதுமின்றி கட்டபொம்மன் உரத்த குரலில் ஒப்புக்கொண்டார். பின்னர் பானர்மேன் மரண தண்டனையை அறிவித்தார். அக்டோபர் 1 ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது வாழ்வின் இறுதி நேரத்தை ஒரு வீரனுக்குரிய பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.