இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்றதைப் போலவே தமிழ்நாட்டிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால உணர்வுகள் உள்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற கிளர்ச்சிகள் எழுச்சிகள் மூலமாக வெளிப்பட்டன. அவற்றில் முக்கியமானது கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு எதிராக பாளையக்காரர்கள் செய்த கிளர்ச்சியாகும்.
தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சி விரிவுபடுத்தப்பட்டபோது பாளையக்காரர் முறை வளர்ச்சி பெற்றது. பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு உரிமையாளர் பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டார்.
பூலித்தேவர்
பாளையத்தை பெற்றதற்கு ஈடாக ராணுவ சேவையும் ஆண்டுக் கப்பமும் பாளையக்காரர் மன்னருக்கு செலுத்த வேண்டும். ஆனால் சூழ்நிலைக்கேற்ப பாளையக்காரர்கள் தங்களது கடமைகளிலிருந்து தவறியதோடு அதிகாரத்தையும் பெருக்கிக் கொண்டனர். அவர்களது எண்ணிக்கை, பரந்த வலிமை, உள்நாட்டு செல்வாக்கு, சுயேட்சையான செயல்பாடு போன்ற காரணிகளால் பாளையக்காரர்கள் தென்னிந்திய அரசியல் கட்டமைப்பில் மிகவும் சக்தி மிக்கவர்களாக விளங்கினார்கள். தங்களது பாளையத்திற்குள் தந்திரமான முழு அதிகாரம் உடையவர்களாக தங்களை கருதிக் கொண்டனர். தங்களுடைய நிலங்கள் 60 தலைமுறைகளாக தங்களுக்கு சொந்தம் என்று அவர்கள் கூறிக்கொண்டனர். இவற்றை கிழக்கிந்திய வணிகக்குழு நிராகரித்தது.
பூலித்தேவர்
பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர். நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் கருதலாம். இவ்விருவருமே நவாப்பிற்கு செலுத்த வேண்டிய இஸ்த் அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.