பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் நடந்த உண்மைகளை விளக்கி சென்னை அரசாங்கத்துக்கு மேல் முறையீடு செய்தார். ஒரு குழுவின் முன்பு ஆஜராகுமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதற்கிடையே, அரசாங்கம் சிவசுப்ரமணிய பிள்ளையை விடுதலை செய்தது. கலெக்டர் ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எனவே கட்டபொம்மன் பணிந்து வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காஸாமேயர் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்பு ஆஜரானார். கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று குழு தீர்மானித்தது. ஜாக்சனுக்குப் பதில் எஸ்.ஆர். லூஷிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பாளையக்காரர்களின் கூட்டமைப்பு
ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் குறையைப் போக்கினாலும், தான்பட்ட அவமதிப்பை கட்டபொம்மன் மறக்கவில்லை. தமது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாக அவர் கருதினார். இச்சமயத்தில் சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர் பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய கூட்டிணையை உருவாக்கினார். திருச்சிராப்பள்ளி அறிக்கை வெளியிடப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சிக்கும் தனது தூதுவர்களை மருதுபாண்டியர் அனுப்பி வைத்தார். இவ்வாறு கட்டபொம்மனுக்கும் மருதுபாண்டியனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் புதிய சிக்கலை உருவாக்கியது. 1798 ஆகஸ்டில் சிவகிரி பாளையக்காரரின் புதல்வரும் ஆலோசகரும் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சிவகிரி பாளையக்காரர் வணிகக்குழுவின் திறை செலுத்தும் பாளையம் என்பதால் சென்னை கவுன்சில் இந்த நடவடிக்கையை ஒரு சவாலாகக் கருதி கட்டபொம்மனுக்கு எதிராக போர்தொடுப்பதாக அறிவித்தது.