காரன்வாலிஸ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்களை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம்.
1 . ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்
2 வருவாய் சீர்திருத்தங்கள் அல்லது நிலையான நிலவரித்திட்டம்
3. நீதித் துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள்.
ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்
திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார். வணிகக்குழுவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் வருவாய்க்குமேல் பெருமளவு தரகுப் பணத்தைப் பெற்று வந்தனர். மேலும் தடை செய்யப்பட்டிருந்த அதிக வருமானமுள்ள தனிப்பட்ட வாணிகத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சித் துறையை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காரன்வாலிஸ், குறைந்த ஊதியம் மற்றும் அதிக ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தார். வணிகக்குழு ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் ஊழல் மிகுந்த வணிக முறைகளைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார்.
மேலும் தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையையும் காரன் வாலிஸ் தொடங்கி வைத்தார். இவ்வாறு இந்திய ஆட்சிப் பணித்துறைக்கு அவர் அடித்தளம் அமைத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக பல்வேறு அதிகப்படியான பணியிடங்களை ரத்து செய்தார். வணிகம், நீதி, வருவாய் ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தினார். ஆட்சியமைப்பின் அச்சாணிகளாக இருந்த மாவட்ட கலெக்டர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வருவாய்த்துறையில், வரிவசூலிக்கும் பணியை மட்டும் கவனித்து வந்தனர்.
நீதித் துறை சீர்திருத்தங்கள்
நீதித் துறையை சீரமைக்கும் பணியில் நீதிபதியும் சிறந்த அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் சேவைகளை காரன் வாலிஸ் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டன.