ஒரு சிறந்த ஆட்சியாளரும் போர்த் தளபதியுமான காரன் வாலிஸ் பிரபு வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து 1786ல் தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். இவர் அரசியல் தொடர்புகள் மிகுந்த செல்வாக்கும், செல்வமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரதம அமைச்சர் பிட் என்பவரின் நெருங்கிய நண்பர். கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த டுண்டாஸ் என்பவருக்கும் நெருக்கமானவர். அமெரிக்க விடுதலைப் போரில் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்தவர். 1781ல் அமெரிக்கப் படைகள் முன்பு சரணடைந்த போதிலும் அவரது புகழ் சற்றும் மங்கவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் நம்பிக்கையை அவர் தொடர்ந்து பெற்றிருந்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் அவருக்கு இந்தியாவில் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.
காரன் வாலிஸ் பிரபு |
திப்பு சுல்தானும் மூன்றாம் மைசூர் போரும் (1790 - 1792)
மங்களூர் உடன்படிக்கை (1784) மைசூர் அரசின் படைவலிமையை மட்டுமில்லாமல் ஆங்கிலேயரின் பலவீனத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. மேலும், அது திப்பு சுல்தானுக்கும் வலிமை சேர்த்தது. தனது தந்தையைப் போலவே ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு அகற்றுவதில் திப்பு ஆர்வம் கொண்டிருந்தார். தக்க தருணத்தில் தனது தந்தையைக் கைவிட்டு பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்ட ஹைதராபாத் நிசாமையும் மராட்டியரையும் பழிவாங்கவும் திப்பு முடிவு செய்தார்.