இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் பழமையானவை. அவை, ஆக்சஸ் பள்ளத்தாக்கு அல்லது சிரியா அல்லது எகிப்து போன்ற நிலப்பகுதிகள் வழியாக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால், 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு பல வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தங்களது வர்த்தக மையங்களை ஏற்படுத்தின. வணிகர்களாக இந்தியாவுக்கு வந்த அவர்கள், காலப்போக்கில் இந்திய அரசியலில் ஈடுபட்டு இறுதியாக தங்களது குடியேற்றங்களையும் அமைத்துக் கொண்டனர். ஐரோப்பியர்களுக்கிடையே நிலவிய வர்த்தகப் போட்டி அரசியல் ஆதிக்கத்திற்கான போட்டியாக மாறியது. இறுதியில், இந்தியாவில் தங்களது ஆட்சியை அமைத்ததின்மூலம் பிரிட்டிஷார் அப்போட்டியில் வெற்றிபெற்றனர்.
போர்ச்சுகீசியர்கள்
வாஸ்கோடகாமா
1498 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் போர்ச்சுகீசியப் பயணியான வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டை துறைமுகத்தை வந்தடைந்தார். கள்ளிக் கோட்டை ஆட்சியாளர் சாமரின் அவரை அன்புடன் வரவேற்றார். அடுத்த ஆண்டே அவர் போர்ச்சுகல் திரும்பினார். 1500ல் பெட்ரோ அல்வரிஸ் காப்ரல் இந்தியாவுக்கு வந்தார். 1502ல் வாஸ்கோடகாமா இரண்டாவது பயணத்தையும் மேற்கொண்டு இந்தியா வந்தார். கள்ளிக்கோட்டை, கண்ணணூர், கொச்சி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தங்களது வாணிக நிலையங்களை நிறுவிக் கொண்டனர்.
இந்தியாவில் முதல் போர்ச்சுகீசிய ஆளுநராகத் திகழ்ந்தவர் பிரான்சிஸ் டி அல்மய்டா. பின்னர், 1509 ஆம் ஆண்டு அல்புகர்க் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் ஆட்சியாளரிடமிருந்து கோவாவைக் கைப்பற்றிக் கொண்டார். அதன்பின்னர் இந்தியாவிலிருந்த போர்ச்சுகீசியப் பகுதிகளின் தலைமையிடமாக கோவா திகழ்ந்தது. அல்புகர்க், மலாக்கா மற்றும் இலங்கையையும் கைப்பற்றினார். கள்ளிக்கோட்டையில் ஒரு கோட்டையையும் அமைத்தார். இந்தியப் பெண்களை மணந்து கொள்ளுமாறு அவர் தமது நாட்டவரை உற்சாகப்படுத்தினார். இந்தியாவில் போர்ச்சுகீசியர்களை மிகவும் வலிமையான சக்தியாக மாற்றிய அல்புகர்க் 1515ல் மறைந்தார்.