ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வழிபாடு பற்றி ஏற்கனவே அறிந்துகொண்டோம். நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பல்லவ, பாண்டிய, சோழர் ஆட்சிக் காலங்களில் பக்தி உணர்வைப் பரப்பினார்கள். ஆனால், இடைக்கால இந்திய பக்தி இயக்கத்தின் தன்மை வேறுபட்டதாகும். இந்தியாவில் இஸ்லாமிய சமயம் பரவியதால் ஏற்பட்ட விளைவுகளின் பயனாக எழுந்ததே இடைக்கால பக்தி இயக்கம். ஒரு கடவுட்கொள்கை, சமத்துவம், சகோதரத்துவம், சடங்குகளை புறக்கணித்தல் போன்றவை இஸ்லாத்தின் தன்மைகளாகும். இத்தகைய இஸ்லாமிய கருத்துக்கள் அக்கால சமயத் தலைவர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும், சூஃபித்துறவிகளும் பக்தி இயக்க சீர்திருத்தவாதிகளான ராமானந்தர், கபீர், நானக் போன்றவர்களின் சிந்தனைகளை தட்டியெழுப்பினர்.
சூஃபி இயக்கம்
குவாஜா மொய்னுதீன் சிஸ்தி
இஸ்லாமிய சமயத்திற்குள் தோன்றிய தாராள சீர்திருத்த இயக்கமே சூஃபி இயக்கமாகும். பாரசீகத்தில் தோன்றிய சூஃமி இயக்கம் பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. லாகூரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபித் துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார். இந்தியாவின் சூஃ'பித்துறவிகளிலேயே புகழ் மிக்கவர் குவாஜா மொய்னுதீன் சிஸ்தி. அவர் ஆஜ்மீரில் தங்கி தனது கருத்துக்களை பரப்பிவந்தார். அவரது சீடர்கள் சிஸ்தி அமைப்பினர் என்று அழைக்கப்பட்டனர்.
மற்றொரு சூஃபித்துறவியான ஷிகாபுதீன் சுஹ்ராவர்தி என்பவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் பகாவுதீன் சக்காரியா. அவரது சீடர்கள் சுஹ்ராவர்தி அமைப்பினை ஏற்படுத்தினர். சிஸ்தி அமைப்பைச் சேர்ந்த மற்றொரு சூஃபித்துறவி நிசாமுதீன் அவுலியா. அவர் மக்களிடையே சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை பரப்பி வந்தார். இத்தகைய சூஃபித்துறவிகளை, இன்றும் கூட முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏராளமான இந்துக்களும் வழிபட்டு வருகின்றர். அவர்களது கல்லறைகள் இவ்விரு வகுப்பினரும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களாகத் திகழ்கின்றன.