
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான். |
21 |
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வெயிலில் வருந்துபவர்க்கு நீரோடு கூடிய நிழல். நிலமெல்லாம் கட்டுக்கட்டாக நெல், போற்றும் நல்ல பெயர், புகழ், பெருமையுடன் வாழும் வாழ்வு, நல்ல மக்களை உடைய ஊர், வளரும் செல்வம், ஆகியவற்றை நெஞ்சில் வஞ்சம் இல்லாதவருக்கு வழங்குவாள்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்? |
22 |
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்.
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. |
23 |
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடுவு நிலைமையோடு (நடுநிலையோடு) சாட்சியோ (கரி), தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், அச்சுறுத்தும் ஆவி வேதாளம் சேரும். வெள்ளை எருக்கு பூக்கும். பாதாள மூலி (பாசி, பாசான்) படரும். செல்வச் செழிப்பைச் சேரவொட்டாமல் தடுக்கும் மூதேவி வலியச் சென்று இருந்துகொண்டு வாழ்வான். பாம்புகள் குடியேறும். இப்படியெல்லாம் வீடு பாழாகப் போய்விடும்.
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே மடக்கொடி இல்லா மனை. |
24 |
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம்.
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. |
25 |
தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும். தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும்.