
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. |
நூல்
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். |
1 |
மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. |
2 |
பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி.
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. |
3 |
இந்த உடம்பே துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது அல்லவா?. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா? கூடாது. ஊழ்தான் இதனை இட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்லூழ் இருந்தால் இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதனை விளங்கிக்கொண்டு வாழ்வதுதான் வீடுபேறு. இந்த வீடுபேற்றினைப் பெற்று வாழ்பவர்களை உலகம் கொண்டாடும்.
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. |
4 |
எண்ணி ஒரு செயலை யாராலும் செய்துமுடிக்க இயலாது. செய்துமுடிக்கும் செயலெல்லாம் அவன் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது. கண் தெரியாத ஒருவன் தன் கையிலிருந்த தடியை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும். அது அவனுக்கு ஆகும் காலம். ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை, கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி - திருக்குறள்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். |
5 |
வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டுக்கொண்டிருந்து சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.