உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. |
6 |
ஒருவருக்கென்று உள்ளது அவரது உடல், உயிர், இவற்றில் முளையாக ஊறிக்கிடக்கும் ஊழ் ஆகியவற்றை அன்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளத்தக்க சுகம் வேறொன்றும் இல்லை. வெள்ளத்திலோ, கடலிலோ ஓடியோ, இழுத்துச் சென்றோ மீண்டு வரையேறினாலும் அவரவர் உடலில்தான் சுகம் காணமுடியும். ஆண் பெண் உறவில்கூடத் தருவது மற்றொருவராயினும் சுகம் காண்பது அவரவர் உடலோடு வாழும் உயிர்தான்.
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. |
7 |
எல்லாப் படியாலும் எண்ணினால்இவ் உடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்க மலம் நீர் போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு இப்படி அப்படி எப்படி என்று எல்லாப் படியாலும் எண்ணினால், இந்த உடம்பானது பொல்லாப் புழு மலிந்திருக்கும் நோய் ஆகும். நல்லவர்கள் இதனை அறிந்துகொண்டிருப்பர். ஆதலினால் இதனைப் பிறிதென்றே எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். உடலிலிருந்து பிரியும் மலம், சிறுநீர் ஆகியவற்றை பற்றி யாரும் பேசுவதில்லை. அது போல இந்த உடம்பு இவ்வளவு அழகு, இவ்வளவு இன்பம் என்று யாரும் பேசமாட்டார்கள். குரம்பை = உடம்புக் கூடு.
பொல்லாப் புழு என்றது உடம்பிலுள்ள செல்-அணுக் கூறுகளை. தெம்பு, சோர்வு போன்ற உணர்வுகளை எண்ணிப்பார்த்த ஔவை ஏதோ புழு நெண்டுகிறது என்று கண்டுணர்ந்து கூறியிருக்க வேண்டும். அல்லது குடலானது புழு போன்று இருப்பதை எண்ணியிருக்க வேண்டும்.
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். |
8 |
பொருள் ஈட்டும் முயற்சி கணக்கில் அடங்காத பலவாயினும் கைக்கூடுவது ஊழின் அளவே நிகழும். அதற்கு மேல் செல்வம் சேராது. தேடிய செல்வத்தால் மரியாதை காணும் மகிமை பொருந்திய உலக மக்களே! இதனைக் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் செல்வமும் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை.
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. |
9 |
ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம் "நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும் எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். |
10 |
இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், இறந்தவரின் நினைவுநாள் ஆண்டு அண்டு தோறும் வரும்போதெல்லாம் இறந்தவரை நினைத்துக்கொண்டு அழுது அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாயிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள்.