அதிகாரம் 14
2 அவள் அரச ஆடை அணிகளைக் களைந்து விட்டு, அழுகைக்கும் துக்கத்திற்கும் ஏற்ற ஆடைகளை உடுத்திக் கொண்டாள். விலையுயர்ந்த பலவித நறுமண எண்ணெய்களுக்குப் பதிலாகச் சாம்பலையும் சேற்றையும் தலையில் போட்டுக்கொண்டு நோன்புகளால் தன் உடலை ஒறுத்தாள். தான் மகிழ்ச்சி கொண்டாடி வந்த இடங்களெங்கும் தன் கூந்தல் மயிரைப் பிய்த்துப் போட்டுப் பரப்பினாள்.
3 இந்நிலையில் அவள் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை மன்றாடினாள்: "என் ஆண்டவரே, நீர் ஒருவரே எங்கள் அரசர்! திக்கற்ற உம் அடியாளுக்கு உதவி புரிந்தருளும். உம்மையன்றி எனக்கு வேறு துணை ஏது?
4 என் ஆபத்து என் கைகளிலேயே இருக்கின்றது.
5 உமக்கு நித்திய உரிமையாய் இருக்கும்படி எல்லா மக்களினின்றும் இஸ்ராயேலையும், அவர்களின் முன்னோர் அனைவரினின்றும் எங்கள் முன்னோரையும் தேர்ந்தெடுத்தீர் என்று என் தந்தையிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
6 உம் திருமுன் நாங்கள் பாவம் செய்தோம். அதனால் எங்கள் பகைவர் கையில் எங்களை ஒப்படைத்தீர்.
7 ஏனென்றால் நாங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கி வந்தோம்.
8 ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்! இப்போதோ அவர்கள் மிகக்கொடிய அடிமைத்தனத்தால் எங்களை நொறுக்கினதும் போதாமல், புறவினத்தார் வாய் திறந்து தங்கள் விக்கிரகங்களின் ஆற்றலைப் புகழவும் ஒரு மாமிச அரசனை மகிமைப்படுத்தவும் கருதி, உம்முடைய வாக்குறுதிகளைப் பொய்யாக்கவும்,
9 உமது உரிமைச் சொத்தை அழித்துப்போடவும், உம்மை வாழ்த்துகிறவர்களின் வாய்களை அடைக்கவும்,
10 உமது ஆலயத்தினுடையவும் பீடத்தினுடையவும் மகிமையைக் கெடுக்கவும் எண்ணம் கொண்டு தங்கள் விக்கிரகங்களின் கைகள் மீது தங்கள் கைகளை வைத்த விதமாய் ஆணையிட்டார்கள்.
11 ஆண்டவரே, எங்கள் அழிவைக் கண்டு அவர்கள் மகிழாதபடிக்கு, விழலுக்கு ஒப்பான அவர்கள் கையிலே உமது செங்கோலைக் கொடாதேயும்@ அவர்களுடைய சதித் திட்டத்தை அவர்கள் மீதே திருப்பி, எங்களைத் துன்புறுத்தத் தொடங்கினவனை அழித்து விடும்.
12 ஆண்டவரே, எங்களை நினைவுகூர்ந்து, எங்களது இடுக்கண் வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தியருளும். ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் அரசரே, எல்லாம் வல்லவரே, அடியேனுக்குத் திடம் அளித்தருளும்.
13 சிங்கத்தின் முன் எனக்கு நாவன்மையை அளித்தருளும். எங்கள் பகைவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அடியோடு அழியும்படி அவன் அவர்களைப் பகைக்கச் செய்தருளும்.
14 எல்லாம் அறியும் ஆண்டவரே, உம்மையன்றி வேறு துணை ஏதுமில்லாத எனக்கு உதவி புரிந்தருளும்.
15 தீயவருடைய வீண் பெருமையை நான் வெறுக்கிறேன் என்றும், புறவினத்தார், விருத்தசேதனம் செய்யப்படாதார் முதலியோருடைய படுக்கையை நான் விரும்புவதில்லை என்றும் நீர் அறிவீர்.
16 என் தேவையையும் நீர் அறிவீர்: மக்கள் மத்தியில் தோன்றும் வேளையில் நான் தலையில் அணியும் பெருமையினுடையவும் மகிமையினுடையவும் அடையாளத்தை வெறுக்கிறேன். பெண்ணின் சூதகத் துணியைப் போல் அதை வெறுத்து என் மௌன நாட்களில் அதை அணிவதில்லை@
17 ஆமானுடைய மேசையில் அடியேன் உணவு கொள்ளவில்லை@ அரசனுடைய விருந்தில் நான் இன்பம் துய்க்கவில்லை@ படைக்கப்பட்ட திராட்சை இரசத்தையும் நான் பருகவில்லை@
18 ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, அடியேன் இங்கு வந்தது முதல் இந்நாள் வரை உம்மில் அல்லாது வேறொன்றிலும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை- இவை எல்லாவற்றையும் நீர் அறிவீர்!
19 எல்லாம் வல்ல இறைவா, யாதொரு உதவியுமற்று இருப்போருடைய கூக்குரலைக் கேட்டு, தீயோருடைய கையினின்று எங்களைக் காப்பாற்றி, எனக்குள்ள அச்சத்தையும் ஒழித்தருளும்."