வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது, நீதித்துறையில் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. அதுவரை நீதி நிர்வாகத்தை நடத்திவந்த நவாப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தார். அவரது பல தீர்ப்புகள் கொடுமையானதாக இருந்தன. ஜமீன்தார்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதுடன், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். மொத்தத்தில் நீதித்துறை ஊழலின் உறைவிடமாகவே காணப்பட்டது.
கிழக்கிந்திய வணிகக் குழு
நீதி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் ஒரு உரிமையியல் நீதிமன்றமும், இந்திய நீதிபதியின் கீழ் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டன. மாவட்ட நீதி மன்றங்களிலிருந்து வரும் வழக்குகளை விசாரிக்க உரிமையியல் வழக்குகளுக்கு ஒன்றும், குற்றவியல் வழக்குகளுக்கு ஒன்றும், ஆக இரண்டு மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டன. உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் திவானி அதலத் என்று அழைக்கப்பட்டது, இதற்கு ஆளுநரும் ஆலோசனைக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் தலைமை வகிப்பர். அதேபோல், குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது. இதற்கு ஆளுநரும் அவசர ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி ஒருவரும் தலைமை வகிப்பர்.
நீதிபதிகளுக்கு உதவியாக இந்து மற்றும் முஸ்லிம் சட்டங்களின் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றறிந்த பண்டிதர்களால் இந்து சட்டத்தொகுப்பு ஒன்று வடமொழியில் உருவாக்கப்பட்டது. இது பாரசீக மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் ஹால்ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது.