பசீன் உடன்படிக்கையின் உடனடி விளைவாக பிரிட்டிஷ் படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையின் கீழ் பூனாவிற்கு சென்று அங்கு பேஷ்வாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஹோல்கர் பூனாவிலிருந்து தப்பியோடினார்.
இரண்டாம் மராட்டியப் போர் (1803 - 1805)
தௌலத்ராவ் சிந்தியாவும், இரகூஜி பான்ஸ்லேயும் பசீன் உடன்படிக்கையை மராட்டியரின் தேசத்திற்கு ஏற்பட்ட இழுக்காக கருதினர். இவ்விரு தலைவர்களின் படைகளும் ஒன்றிணைந்து நர்மதை ஆற்றைக் கடந்து வந்தன. 1803 ஆகஸ்டில் வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக போர் அறிவிப்பு செய்தார். 1803 ஆகஸ்டில் அகமது நகரை கைப்பற்றிய ஆர்தர் வெல்லெஸ்லி மராட்டியக் கூட்டுப்படைகளை அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள அசே என்ற இடத்தில் முறியடித்தார்.
பின்னர், மராட்டிய தேசத்துக்குள் நுழைந்த ஆர்தர் வெல்லெஸ்லியின் படைகள் போன்ஸ்லேயை அரகான் சமவெளியில் தோற்கடித்தன. இதன் விளைவாக, வெல்லெஸ்லி போன்ஸ்லேயுடன் தியோகன் உடன்படிக்கையை செய்துகொண்டார். இதுவும் ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி ஒரிசாவின் கட்டாக் மாகாணம் பிரிட்டிஷாருக்கு கிடைத்தது.
சிந்தியாவுக்கு எதிராக பிரிட்டிஷ் படைத்தளபதி லேக் மேற்கொண்ட படையெடுப்பு பிரமிக்கத் தக்கதாகும். வரலாற்றுப் புகழ்வாய்ந்த டெல்லி நகருக்குள் நுழைந்த லேக். அங்கிருந்த முகலாயப் பேரரசர் ஷா ஆலத்தை பிரிட்டிஷாரின் பாதுகாப்பில் கொண்டு வந்தார். பரத்பூர் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய லேக் ஆக்ராவை ஆக்ரமித்துக் கொண்டார். இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான மராட்டிய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிந்தியா பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொண்டார். இது கர்ஜி - அர்ஜூன்கான் உடன்படிக்கை எனப்படும்.