1848 ஆம் ஆண்டு டல்ஹவுசி பிரபு பதவியேற்றபோது அவர்தான் இந்தியாவில் பதவி வகித்த தலைமை - ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவராயிருந்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கை சிறப்புமிக்கதாகும். ஆக்ஸ்போர்டிலுள்ள கிறிஸ்து கல்லூரியில் கல்வி பயின்றவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இங்கிலாந்து பிரதமர் சர் ராபர்ட் பீல் என்பவரின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்ந்தார். வணிக வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தபோது ரயில்பாதை வளர்ச்சிக்கு பாடுபட்டார். 1847 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதை ஏற்று 1848 ஜனவரியில் இந்தியாவுக்கு வந்தார்.
இணைப்பு கொள்கை
டல்ஹவுசி பிரபு
டல்ஹவுசி ஆட்சிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அவர் நடத்திய 'இணைப்பு'களேயாகும். வணிகக் குழுவின் எல்லைகளை அவர் விரிவுபடுத்தியதற்கு அரசியல் ஆதிக்கம் பேரரசு விரிவாக்கம், வணிக மேம்பாடு நிதி ஆதாரத்தைப் பெருக்குதல் போன்ற நோக்கங்கள் இருந்தன. தனது இணைப்புகளுக்கு அவர் வெவ்வேறு காரணங்களைக் கூறினாலும், இணைக்கப்பட்ட நாடுகளில் நிலவிய முறைகேடான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. குறிப்பாக அயோத்தி இணைப்பிற்கு இதுவே காரணமாகும். இணைக்கப்பட்ட நாடுகளில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் அவர் உறுதியாக இருந்தார். அதே சமயம், இத்தகைய இணைப்புகளால் பேரரசுக்கு பாதுகாப்பு, வாணிகம் மற்றும் நிதி ஆதாயங்கள் போன்ற நன்மைகளையும் அவர் கருத்தில் கொண்டிருந்தார். டல்ஹவுசி இந்தியாவிற்கு வரும்போதே இணைப்புக் கொள்கையை பின்பற்றியாகவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தார் என்றும் கூறமுடியாது. ஆனால், இணைப்புக் கொள்கையை பின்பற்றியதன் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை மேலும் வலிமைப்படுத்தினார். பஞ்சாப், கீழ்பர்மா, மத்திய மாகாணத்தின் பெரும்பகுதி, அயோத்தி போன்றவை அவரால் இணைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும்.