இந்தியாவில் தேசியம் வளர்ந்தமைக்கான காரணங்கள்
இந்தியாவில் தேசியம் தோன்றி வளர்ச்சி பெற்றதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
1.அரசியல் ஒற்றுமை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் அரசியல் அடிப்படையிலும் ஆட்சியடிப்படையிலும் முதன்முறையாக ஒரு குடையின்கீழ் (பிரிட்டிஷ் ஆட்சி) கொண்டுவரப்பட்டது. ஒரே சீரான சட்டமும் அரசும் அறிமுகப்படுத்தப்பட்டன.
2. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
ரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள் மற்றும் சாலைகள் கால்வாய்கள் மூலமான போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்களிடையே தகவல் தொடர்பு எளிதாகியது. இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர். மேலும் அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும் இது வழிவகுத்தது.
3. ஆங்கில மொழியும் மேலை நாட்டுக் கல்வியும்
நாட்டில் தேசியம் வளர ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது, ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்து தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். மேலை நாட்டுக்கல்வி மூலம், சுதந்திரம், சமத்துவம், விடுதலை, தேசியம் போன்ற மேலைநாட்டு கருத்துக்கள் இந்தியாவில் பரவி தேசியம் தோன்றலாயிற்று.
4. பத்திரிக்கைகளின் பங்கு
இந்தியாவில் வெளியான ஆங்கிலம் மற்றும் நாட்டு மொழி பத்திரிக்கைகள் தேசியச் சிந்தனையைப் பரப்பின.