அலெக்சாண்டர் வழியிலிருந்த பழங்குடியினரை முறியடித்தவண்ணம் தனது படைகளுடன் பியாஸ் நதிவரை தொடர்ந்து முன்னேறினார். மேலும் முன்னேறி கங்கைச் சமவெளி நோக்கி செல்ல விரும்பினார். ஆனால் அவரது வீரர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். நீண்டகாலமாகப் போரிட்டு அவர்கள் களைப்புற்றிருந்தனர். எனவே தாயகம் திரும்புவதிலேயே குறியாக இருந்தனர். அலெக்சாண்டரால் அவர்களை சமாதானப்படுத்த முடியாமற்போனதால் தாயகம் திரும்ப முடிவு செய்தார். இந்தியாவில் தாம் கைப்பற்றிய பகுதிகளை ஆட்சிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்தார். சிந்து முதல் பியாஸ் வரையிலான பகுதிகளை மூன்று மாகாணங்களாகப் பிரித்து அவற்றுக்கு ஆளுநர்களை நியமித்தார். கி.மு. 326 அக்டோபரில் அவரது படைகள் இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கின. தாயகம் திரும்பும் பயணம் மிகவும் கடுமையானதாகவே இருந்தது. குடியரசுப் படைகள் பல அவரது படைகளை தாக்கின. ஒருவாறு சமாளித்து அவர் சிந்து நதியைக் கடந்தார். தாயகம் செல்லும் வழியில் பாபிலோனியாவில் அலெக்சாண்டர் நோய்வாய்ப்பாட்டு கி.மு. 323 ம் ஆண்டு மறைந்தார்.
அலெக்சாண்டர் படையெடுப்பின் விளைவுகள்
மௌரியர்களின் கீழ் வடஇந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டதே அலெக்சாண்டர் படையெடுப்பின் உடனடி விளைவாகும். சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது. இந்தியா, கிரேக்கம் ஆகியவற்றுக்கிடையே நேரடித் தொடர்பு ஏற்படுவதற்கு அலெக்சாண்டர் படையெடுப்பு வழிவகுத்தது. அவர் ஏற்படுத்திய புதிய வழிகள், கடல் ஆய்வுகள் போன்றவற்றால் இந்தியாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தகத் தொடர்புகள் மேலும் பெருகின. அவரது அகால மரணத்தினால், வடமேற்கு இந்தியாவை தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமல் போயிற்று. சந்திரகுப்தரின் கீழ் மௌரியப் பேரரசு விரிவடைந்தமையால் சிந்துவெளியில் அவர் ஏற்படுத்திய ஆதிக்கம் சொற்பகாலமே நீடித்தது.