பிரிட்டிஷாரின் வேளாண் கொள்கை
இந்தியா வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே! பெரும்பான்மை மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக வேளாண்மையை நம்பியுள்ளனர். மகசூல் நன்றாக இருந்தால் செல்வம் செழிக்கும். இல்லையேல் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும்.
18ஆம் நூற்றாண்டுவரை, இந்தியாவில் வேளாண்மைக்கும் குடிசைத் தொழில்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா வேளாண்மையில் செழித்திருந்தது. அதேபோல் கைத்தொழில் உற்பத்தியிலும் உலகின் முக்கிய இடத்தை அது பெற்றிருந்தது. ஆனால் பிரிட்டிஷார் கைத்தொழிலை நசுக்கியதோடு, புதிய நில உடைமை முறைகள், வருவாய் கொள்கையை அறிமுகப்படுத்தி வேளாண் கட்டமைப்பையே மாற்றியமைத்தனர்.
இந்தியாவின் தேசிய வருமானம், அயல்நாட்டு வாணிபம், தொழில் விரிவாக்கம் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டின் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. ஆனால் பிரிட்டிஷாரின் கொள்கைகள் நிலவரியை எப்படி வசூலிப்பது என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இந்தியக் குடியானவர்களின் நலன்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த வருவாய் முறை புறக்கணிக்கப்பட்டது. அதற்குப் பதில் வருவாய் திரட்டுகின்ற இரக்கமற்ற கொள்கையை அவர்கள் பின்பற்றினார்கள்.
தங்களது வருகைக்குப்பின் பிரிட்டிஷார் மூன்று வகை நிலஉடைமை முறைகளை பின்பற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மொத்த நிலப்பரப்பில் சுமார் 19 சதவிகிதம் ஜமீன்தாரி முறை அல்லது நிலையான நிலவரித் திட்டத்தின்கீழ் இருந்தது. வங்காளம், பீகார், காசி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் நடுப்பகுதி, வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகள் இவற்றில் அடங்கும். சுமார் 30 சதவிகித நிலப்பரப்பில் மகல்வாரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பெரும்பகுதி, மத்திய மாகாணங்கள், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஒரு சில மாற்றங்களுடன் இம்முறை பின் பற்றப்பட்டது. எஞ்சிய 51 சதவிகித நிலப்பரப்பில் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, பம்பாய் மாகாணங்கள், அஸ்ஸாம், பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகள் இம்முறையின் கீழ் வந்தன.