“இப்படிப்பட்ட இந்திரனை ஒருபொழுதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.”
“ஆனால் அசுரர்கள், இப்படிப்பட்ட இந்திரனையே விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய அரசனை மனிதனாக அல்ல, கடவுளாகவே மதிக்கிறார்கள். அவனைப் பூஜிப்பதற்காக அவர்கள் செய்யும் காரியங்களைச்
சொன்னால் நம்பவே கஷ்டமாயிருக்கும்.”
“ஆம், நானும் பார்த்திருக்கிறேன்; அவர்களுடைய புரோகிதர்கள், அசுரர்களைக் கழுதையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.”
“ஆம், கழுதைகளுக்கும் இழிவாக அசுரர்கள் லிங்க பூஜை செய்கிறார்கள். ஆண்குறி பெண்குறி சேர்ந்திருப்பது போன்றது. அந்த லிங்கவடிவம். ஆண், பெண் உறவின் இன்பத்திற்கு அவைகள் சாதனமென்பதையும், அந்த உறவின் மூலம் நமது எதிர்கால சந்ததி வளர்கிறது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மண்ணிலோ அல்லது கல்லிலோ அந்த வடிவத்தைச் செய்து வைத்துக் கொண்டு வணங்குவது பெரிய முட்டாள்தனமாக இருக்கிறது அல்லவா?”
“இதிலென்ன சந்தேகம்?”
“அந்த அசுர அரசன் இந்த லிங்க தெய்வத்தின் பெரிய பக்தன். ஆனால் இதுவும் ஒரு வேஷம் என்றே நான் நினைக்கிறேன். அந்த அசுர அரசனும் அவனுடைய புரோகிதர்களும் முட்டாள்களல்ல. ஆரியர்களாகிய நம்மைப் பார்க்கிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய நகரங்களைப் போல நகரங்கள் அமைப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும். அவர்களுடைய கடைவீதி, தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் தடாகங்கள், அதன் உயர்ந்த படிக்கட்டுகள், அகன்ற ராஜ வீதிகள் போன்ற அமைப்புக்களை நம் ஆரிய பூமியில் காணவே முடியாது. நான் அசுரர்களுடைய புராதன நகரங்களையும் பார்த்திருக்கிறேன். அசுரர்கள் விட்டுச் சென்ற அழிந்து போனபழைய நகரங்களை ஆரியர்கள் பழுது பார்த்துத் திரும்ப அமைத்திருக்கிறார்கள். ஆயினும் அவற்றிலே பழைய அமைப்பைக் காண முடியவில்லை. ஆனால் இந்தப் புதிய நகரத்தை அரசன் ஸம்பரன் நேரே இருந்து கட்டினானாம். தேவலோகம் போல் இருக்கிறது.”
“தேவலோகமா?”
“ஆம், தேவலோகம்தான். ஏனெனில், இந்த உலகத்தில் அந்த நகரத்துக்கு உதாரணமாகச் சொல்ல வேறு கிடையாது. அந்தப் புதிய நகரத்திலுள்ள ஒரு வீட்டை எடுத்துக் கொள்வோம். இதில் வெளியாரை வரவேற்பதற்கு அலங்கரிக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு அறைகள்; புகை போக்கி
