கழுதைகள் இவற்றின் முன்னே புல்லை எடுத்துப் போட்டான். அப்பால் வனதேவதைகளை வணங்கி விட்டுத் தன் ஆசனத்தில் படுத்துக்கொண்டான்.
மறுநாள் அதிகாலையில் எழுந்தபோது, கடந்த ஓர் இரவு தங்கள் இருவரையும் உடன்பிறந்தோராக ஆக்கி விட்டதை அவர்கள் உணர்ந்தனர். காலை உதயத்தில் ரோசனாவைப் பார்த்த புருகூதனுக்குத் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
“சகோதரி! உன்னுடைய கன்னங்களிலே முத்தமிட என் மனம் விழைகிறது.”
“புருகூத! என் மனமும்தான். இப்போது நாமிருவரும் உடன் பிறந்தோர் ஆகிவிட்டோம்.”
புருகூதன் விரிந்துகிடக்கும் அவளுடைய கூந்தலைக் கோதிக் கொண்டே அவளது இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். அவர்கள் இருவருடைய முகங்களும் மலர்ந்தன! நான்கு விழிகளிலும் நீர் மல்கி இருந்தது. முகம் கழுவிக் கொண்ட அவர்கள், கொஞ்சம் மாமிசம், மாவு இவற்றைப் புசித்ததும் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். வழியில் இரண்டு மூன்று இடங்களில் சிறிது தாமதித்துத் தாமதித்து நடந்தாலும்கூட, பேசிக்கொண்டே சென்ற இவர்களுக்கு வழியின் தூரமே தோன்றவில்லை: அது மட்டுமல்ல, மலையை எப்பொழுது கடந்தோம்; எப்பொழுது அந்தப் பெரிய கிழவரைச் சந்தித்தோம் என்பதுங்கூடத் தோன்றாமலிருந்தது, இவர்களுக்கு, ரோசனா தன்னுடைய முப்பாட்டனாரிடம் புருகூதனை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பழங் கிழவரும்,
புரு குலத்தோருடைய வீரத்தைச் சொல்லிப் புகழ்ந்து கொண்டே புருகூதனை வரவேற்று உபசரித்தார்.
2
மலையின் இந்தச் சரிவிலே, மத்ரர்களுடைய சிறிய கிராமம் இருந்தது. இதிலுள்ள வீடுகள் யாவும் தற்காலிகமானவை. புற்களாலும், மூங்கில்களாலும் வேயப்பட்டிருந்தன. இதன் அடிவாரத்தில் மணற்பாங்கிலும் கல் பாறையிலுங் கூட அடர்ந்த காட்டையும், பெரிய தேவதாரு மரங்களையும் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த மலைச் சிகரத்திலோ மரங்கள் என்ற பேச்சே கிடையாது; சமதளத்தையும் காணமுடியவில்லை.
பசும் புற்களும் சில பத்தைகளும்தான் பாறைகளை மறைத்திருக்கின்றன; ஆங்காங்கு ஆடு மாடுகள், குதிரைகள் முதலிய மிருகங்கள் புற்களை
