விட்டனவே? ஆம், ஆனால் மடங்கள் இல்லாவிட்டாலும் பக்தர்களின் மனத்திலே சிரத்தை இருக்கிறது. இன்று இந்தக் காஷாயதாரி பாபாவைப் பார்த்துப் பௌத்த பிக்ஷு என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவரும் கல்யாணம் செய்து கொள்ளாதவரே, அது மட்டுமல்ல! இவருக்கு முன்னால் இருந்த இவருடைய குருமார்களும் பிரம்மச்சாரி காஷாயதாரிகளே. ஹிந்து அல்லது பௌத்தர்களாயிருந்து முஸல்மான்களான பத்து பதினைந்து தொழிலாளர் குடும்பத்திலே, இந்த இடத்தை ‘கான்காஹ்’ (முஸ்லீம் சந்நியாசிகள் தங்குமிடம்) என்று சொல்லுகிறார்கள். பிராமணர்கள் இதை மடம் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மற்ற கிராமவாசிகள் இதை மடம் என்றே அழைக்கிறார்கள். இந்த பாபாக்களுக்கு முன்னாலும், இந்த மடங்களிலே ஜாதிப்பிரிவுகள் இல்லை. இந்த பாபாக்கள் காலத்திலும் அங்கு ஜாதிப்பிரிவினை கிடையாது. இவர்களைப் போலவே முன்னாலிருந்தவர்களும் காஷாயம் தரித்துப் பிரம்மச்சாரிகளாய் இருந்தார்கள். முன்னாலிருந்த பிக்ஷு க்களைப் போலவே இவர்களும் நோய்வாய்ப்பட்ட ஜனங்களுக்கு மருந்தும் மந்திரமும் செய்கிறார்கள். துயரப்படும் ஜனங்களுக்கு நல்லுபதேசத்தைச் சொல்லிச் சாந்தியளிக்கிறார்கள். ஆகவே, முற்காலத்தைப் போலவே பௌர்ணமி தினத்தன்று கிராமவாசிகள் இந்த முஸ்லீம் சந்நியாசிகளுக்கு காணிக்கை செலுத்தி வணங்குகிறார்கள். முற்காலத்தில் பௌத்த பிக்ஷு க்களைத்
தங்கள் தெய்வ குருவாக வணங்கியதைப் போலவே, இப்பொழுது இந்தப் பாபாவையும் அவரது சிஷ்யர்களையும் வணங்குகிறார்கள்.
மடத்தின் பழைய தலைவர்களின் சமாதிகளை வணங்கி விட்டு கிராமவாசிகள் திரும்பிச் சென்றனர். இரவிலே பால் போன்ற வெண்ணிலாவின் ஒளி எங்கும் பரவியிருக்கிறது. இஸ்லாமியத் தொழிலாளர்களின் வீட்டுப் பக்கத்திலிருந்து இரண்டு நபர்களோடு ஒரு பெரியவர் மடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் நெருங்கி வந்ததும் மௌல்வி அபுல் அலாயி என்பதை பாபா தெரிந்து கொண்டார். மௌல்வி தன் தலையிலே ஒரு வெள்ளைத் தலைப்பாகையும், உடம்பிலே நீண்ட அங்கியும், வெள்ளைப் பைஜாமாவும் தரித்திருந்தார். அவருடைய நீண்ட கரிய தாடி, காற்றிலே அசைந்து கொண்டிருந்தது. பாபா எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் நீட்டிக் கொண்டு,
“வாருங்கள் மௌலானா சாஹிப்! அஸ்லாம் அலைக்” என்றார்.
“வாலேகும் சலாம்” என்று கூறி பாபாவைத் தழுவிக் கொண்டார் மௌலானா.
“எங்கள் சிம்மாசனம் இந்த வெறுங்கல்தான். அமர்ந்தருளுங்கள்.”
“பிரபோ! நாஸ்திகர் (காபிர்கள்) களின் கூட்டம் இங்கு கூடியிருந்ததை, நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.”
“வேடிக்கை என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லாதீர்கள். அது நூருவின் இதயத்தில் முள்போலத் தைக்கிறது.”