அதிகாரம் 2
2 எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னைப் பேத்தலுக்கு அனுப்பியிருக்கின்றார். ஆதலின் நீ இங்கேயே இரு" என்றார். எலிசேயு அவரை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிரின் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரிய மாட்டேன்" என்று பகன்றார். இங்ஙனம் இருவரும் பேத்தலுக்குப் போனார்கள்.
3 அப்பொழுது பேத்தலில் இருந்த இறைவாக்கினரின் புதல்வர்கள் எலிசேயுவிடம் ஓடிவந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "எனக்குத் தெரியும்@ நீங்கள் அமைதியாய் இருங்கள்" என்று கூறினார்.
4 அப்போது எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னை எரிக்கோ வரை அனுப்பியிருக்கிறார். ஆதலின், நீ இங்கேயே இரு " என்றார். அதற்கு அவர் "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். இங்ஙனம் அவர்கள் இருவரும் எரிக்கோ நகரை அடைந்தனர்.
5 அப்பொழுது அந்நகரிலிருந்த இறைவாக்கினரின் புதல்வர்கள் எலிசேயுவிடம் ஓடிவந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று உமக்குத் தெரியுமா?" என்று அவரைக் கேட்டனர். அதற்கு அவர், "எனக்குத் தெரியும்@ நீங்கள் அமைதியாய் இருங்கள்" என்றார்.
6 மீண்டும் எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னை யோர்தான் நதி வரை அனுப்பி இருக்கின்றார். ஆதலின் நீ இங்கேயே இரு" என்றார். அதற்கு அவர், "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என மறுமொழி தந்தார். ஆதலின், இருவரும் ஒன்றாகச் சென்றனர்.
7 இறைவாக்கினரின் புதல்வருள் ஐம்பது பேர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களை நோக்கியவாறு தொலையில் நின்றனர். எலியாசும் எலிசேயாவும் யோர்தான் நதி தீரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
8 அப்பொழுது எலியாசு தம் போர்வையை எடுத்து மடித்து அதைக்கொண்டு நீரையடித்தார். அது இரண்டாகப் பிரிந்தது. இருவரும் கால் நனையாமல் நடந்து நதியைக் கடந்தனர்.
9 அவர்கள் கரையை அடைந்ததும், எலியாசு எலிசேயுவை நோக்கி, "உன்னை விட்டுப் பிரியுமுன் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என நீ விரும்புகிறாய், சொல்" என்று கேட்டார். அதற்கு எலிசேயு, "உமது ஆவி இருமடங்கு என் மேல் இருக்க வேண்டுகிறேன்" என்று பதில் இறுத்தார்.
10 எலியாசு அவரைப் பார்த்து, "நீ கேட்கும் காரியம் மிகவும் அரிதானது. எனினும், உன்னைவிட்டு நான் பிரியும் போது என்னை நீ காண்பாயாகில், நீ கேட்டதை அடைவாய்@ என்னைக் காணாவிட்டால், அடைய மாட்டாய்" என்றார்.
11 இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழி நடந்து போகையில், இதோ நெருப்பு மயமான ஒரு தேரும், தீயைப் போன்ற குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்து விட்டன. அன்றியும், எலியாசு சூறாவளியின் மூலம் விண்ணகம் ஏறினார்.
12 எலிசேயுவோ அவரைப் பார்த்த வண்ணம், "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ராயேலின் தேரே! அத்தேரின் சாரதியே!" என்று கதறிக் கொண்டிருந்தார். பிறகு அவரைக் காணவில்லை. உடனே அவர் தம் உடைகளைப் பிடித்து அவற்றை இரண்டாய்க் கிழித்தார்.
13 மேலும், அருகில் விழுந்து கிடந்த எலியாசுடைய போர்வையை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து யோர்தானின் கரை மேல் நின்றார்.
14 எலியாசு தமக்கு விட்டுச் சென்றிருந்த போர்வையைக் கொண்டு நீரை அடிக்க, நீர் இரண்டாய்ப் பிரியவில்லை. அப்போது எலிசேயு, "எலியாசின் கடவுள் இப்போது எங்கு இருக்கிறார்?" என்று சொன்னார். மீண்டும் அவர் நீரை அடிக்க நீர் இரண்டாய்ப் பிரிந்தது. எலிசேயுவும் நதியைக் கடந்து சென்றார்.
15 எரிக்கோவில் நின்று கொண்ருந்த இறைவாக்கினரின் பிள்ளைகள் நிகழ்ந்ததைக் கண்ணுற்ற போது, "எலியாசின் ஆவி எலிசேயு மேல் இறங்கிற்று" என்றனர். அன்றியும், அவர்கள் ஓடிவந்து அவருக்கு முன்பாகத் தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து வணங்கினர். பின்னும் அவரைப் பார்த்து,
16 இதோ உம் குருவைத் தேடிச் செல்ல வல்ல ஐம்பது பேர் உம் அடியார்களுக்குள் இருக்கின்றனர். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி மலைமேலாவது பள்ளத்தாக்கிலாவது போட்டிருக்கக் கூடும் என்றனர். அதற்கு அவர், "அவர்களை அனுப்ப வேண்டாம்" என்றார்.
17 ஆனால், எலிசேயு அவ்வாறு அனுப்பச் சம்மதிக்கும் வரை அவர்கள் அவரை வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். அப்போது ஐம்பது மனிதரை அனுப்பினார்கள். இவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் காணவில்லை.
18 எனவே, எரிக்கோ நகரில் தங்கியிருந்த எலிசேயுவிடம் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்களைக் கண்ட அவர், "அனுப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றார்.
19 அந்நகர மக்கள் எலிசேயுவைப் பார்த்து, "ஐயனே, உமக்குத் தெரிந்திருப்பது போல் இந்நகர் வாழ்வதற்கு நல்ல வசதியாகத் தான் இருக்கிறது. ஆயினும் தண்ணீர் மிக மோசமானதாகவும், நிலம் பலன் தராததுமாக இருக்கின்றனவே!" என்றனர்.
20 அதற்கு அவர், "ஒரு புதுப் பாத்திரத்தைக் கொண்டு வந்து, அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வையுங்கள்" என்றார்.
21 அவர்கள் அதைக் கொண்டு வர, எலிசேயு நீரூற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, "இதோ, ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: ~இத்தண்ணீரை நாம் சுத்தப்படுத்தியுள்ளோம். இனி மேல் இதைப் பயன்படுத்தினால் சாவும் இராது@ நிலமும் பலன் தரும்" என்றார்.
22 அது முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசேயு சொன்ன வாக்கின்படியே சுத்தமாய் இருக்கிறது.
23 அங்கிருந்து எலிசேயு பேத்தலுக்குப் போனார். அவர் நடந்து போகும் வழியில் சிறுப்பிள்ளைகள் நகரினின்று வந்து, "மொட்டைத் தலையா! நட@ மொட்டைத் தலையா! நட" என ஏளனம் செய்தனர்.
24 எலிசேயு அவர்களைத் திரும்பிப் பார்த்து, ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். அந்நொடியே காட்டிலிருந்து இரு கரடிகள் வெளிப்போந்து அப்பிள்ளைகளின் மேல் பாய்ந்து அவர்களில் நாற்பத்திரண்டு பேரைக் கடித்துக் கொன்றன.
25 பின்பு எலிசேயு கார்மேல் மலைக்குச் சென்றார். அங்கிருந்து சமாரியா திரும்பினார்.