அதிகாரம் 5
2 அக்காலத்தில் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ கற் கத்திகளைச் செய்து இன்னொரு முறை இஸ்ராயேல் மக்களுக்கு விருத்தசேதனம் செய்" என்று சொன்னார்.
3 ஆண்டவரின் கட்டளைப்படி அவர் செய்து சுன்னத்துக் குன்றில் இஸ்ராயேல் மக்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.
4 இவ்விரண்டாம் விருத்த சேதனத்தின் காரணமாவது: எகிப்திலிருந்து வெளியேறிய ஆண்மக்களாகிய போர்வீரர் அனைவரும் பாலைவனத்தில் நெடுநாளாய் அலைந்து திரிந்த பின் அவ்விடத்திலேயே மாண்டு போயினர்.
5 இவர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டவரே.
6 ஆனால் மக்கள் ஆண்டவருடைய பேச்சைக் கேளாததால், ஏற்கெனவே ஆண்டவர் அவர்களை நோக்கி, "பாலும் தேனும் பொழியும் நாட்டை நாம் உங்களுக்குக் கொடுக்கமாட்டோம்" என்று ஆணையிட்டிருந்தார். இம்மக்கள் எல்லாரும் சாகும்வரை, நாற்பது வருட யாத்திரையின் போது பரந்த பாலை வனத்தில் பிறந்தவர்கள், விருத்தசேதனம் செய்யப்படாமல் இருந்தார்கள்.
7 இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழித்தோன்றல்கள். யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார். ஏனெனில் வழியிலே எவரும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யாததால், அவர்கள் பிறந்த கோலத்தில் நுனித்தோலை வைத்துக் கொண்டு இருந்தனர்
8 மக்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்பட்ட பின்பு அவர்கள் நலம் பெறும் வரை பாளையத்தின் அதே இடத்திலே தங்கியிருந்தனர்.
9 அப்போது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "உங்கள் மேல் இருந்த எகிப்தின் பழியை இன்று நாம் நீக்கி விட்டோம்" என்றார். எனவே, அந்த இடம் இன்று வரை கல்கலா என அழைக்கப்பட்டு வருகிறது.
10 இஸ்ராயேல் மக்கள் கல்கலாவில் இருந்து கொண்டு மாதத்தின் பதினான்காம் நாள் மாலை வேளையில் எரிக்கோவின் சமவெளியிலேயே பாஸ்காவைக் கொண்டாடினர்.
11 மறுநாளில் அவர்கள் நிலத்தின் விளைச்சல்களையும் புளியாத அப்பங்களையும் அவ்வாண்டின் மாவையும் உண்டனர்.
12 அவர்கள் நாட்டின் விளைச்சல்களை உண்ட பிறகு மன்னா பொழிவது நின்றது. இஸ்ராயேல் மக்களும் உண்ண முடியாது போயிற்று. ஆதலால், அது முதல் கானான் நாட்டில் அவ்வாண்டு விளைந்தவற்றை அவர்கள் உண்டு வந்தனர்.
13 மேலும் யோசுவா எரிக்கோவுக்கு வெளியே இருந்த போது ஒருநாள் தன் கண்களை ஏறெடுத்து பார்க்க, இதோ ஒருவர் உருவிய "வாளை கையில் ஏந்தியவராய்த் தனக்கு முன் நிற்கக் கண்டார். யோசுவா அருகில் சென்று, "நீர் யார்? எம்மவரைச் சார்ந்தவரா? என் எதிரிகளைச் சார்ந்தவரா? என்று கேட்டார்.
14 அதற்கு அவர், "அல்ல@ நாம் ஆண்டவருடைய படைத்தலைவராய் இப்பொழுது வந்துள்ளோம்" என்றார்.
15 அதைக் கேட்டு யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவரைப் பார்த்து, "என் ஆண்டவர் தம் ஊழியனுக்குச் சொல்லுகிறது என்ன?" என்று கோட்டார். அதற்கு அவர், "உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு, ஏனெனில் நீ நிற்கிற இடம் மிகவும் புனிதமானது" என்று கூறினார். யோசுவா அக்கட்டளைப்படியே நடந்தார்.