அதிகாரம் 1
2 ரூபன், சிமையோன்,
3 லேவி, யூதா, இசக்கார், சாபுலோன், பெஞ்சமின், தான், நெப்தலி,
4 காத், ஆசேர் முதலியோராம்.
5 ஆதலால், யாக்கோபிற்குப் பிறந்த யாவரும் எழுபது பேர். சூசையோ ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
6 இவனும், இவனுடைய சகோதரர், அவர்கள் தலைமுறையார் எல்லாரும் இறந்த பின்னர்,
7 இஸ்ராயேல் மக்கள் பலுகி, பெரும் திரளாய்ப் பெருகி, மிகவும் வலிமை படைத்தவர்களாய் அந்நாட்டை நிரப்பினர்.
8 இதற்கிடையில் புதிய அரசன் ஒருவன் எகிப்தை ஆள எழுந்தான். இவனோ சூசையை அறியாதவன்.
9 எனவே தன் மக்களை நோக்கி: இதோ, இஸ்ராயேல் புதல்வராகிய மக்கள் பெரும் திரளாய், நம்மிலும் வல்லவராய் இருக்கிறார்கள்.
10 வாருங்கள், அவர்கள் பெருகாதபடி நாம் அவர்களைத் தந்திரமாய் வதைக்க வேண்டும். இல்லாவிடில், ஏதேனும் போர் நேரிடும் காலத்தில் அவர்கள் நம் பகைவரோடு கூடி நம்மை வென்று நாட்டை விட்டுப் புறப்பட்டுப் போகக் கூடும் என்றான்.
11 அப்படியே அவன், சுமை சுமக்கும் கடின வேலையினால் அவர்களைத் துன்புறுத்தச் சொல்லி, வேலை வாங்கும் மேற்பார்வையாளரை நியமித்தான். அப்பொழுது அவர்கள் பாரவோனுக்குக் களஞ்சிய நகரங்களாகிய பிட்டோமையும் இராம்சேசையும் கட்டி எழுப்பினார்கள்.
12 ஆயினும், அவர்களை எவ்வளவுக்கு வருத்தினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் பெருகிப் பலுகினார்கள்.
13 எகிப்தியர் இஸ்ராயேல் மக்களைப் பகைத்துப் பழித்துத் துன்புறுத்தினர்.
14 சாந்து, செங்கல் சம்பந்தமான கொடிய வேலைகளாலும், மண் தொழில்களுக்குரிய பல வகைப் பணிவிடைகளாலும் அவர்களைக் கொடுமைப் படுத்தியதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையே கசப்பாகும்படி செய்தனர்.
15 அன்றியும், எகிப்து மன்னன், எபிரேயருக்குள் மருத்துவம் பார்த்து வந்த செவொறாள், பூவாள் என்பவர்களை நோக்கி:
16 நீங்கள் எபிரேயப் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கையில் பேறுகாலமாகும்போது ஆண்பிள்ளையானால் கொல்லுங்கள்@ பெண்ணானால் காப்பாற்றுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
17 மருத்துவச்சிகளோ, கடவுளுக்குப் பயந்திருந்தமையால், எகிப்து மன்னனின் கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.
18 மன்னன் அவர்களைத் தன்னிடம் அழைப்பித்து: நீங்கள் என்ன காரணத்தின் பொருட்டு ஆண் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள் என்று கேட்டான்.
19 அவர்கள்: எபிரேய மாதர்கள் எகிப்திய மாதர்களைப் போல் அல்லவே@ அவர்கள் மருத்துவத் தொழிலை அறிவார்களாதலால், நாங்கள் அவர்களிடம் போய்ச்சேரு முன்பே பிள்ளை பிறந்து விடுகிறது என்று பதில் கூறினர்.
20 இதன் பொருட்டு கடவுள் மருத்துவச்சிகட்கு நன்மை புரிந்தார். மக்களோ, விருத்தி அடைந்து அதிக வல்லமையுற்றனர்.
21 மருத்துவச்சிகள் கடவுளுக்குப் பயந்து நடந்தமையால் அவர், அவர்களுடைய குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 அதன் பின், பாரவோன்: பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றில் எறிந்து விடுங்கள்@ பெண் குழந்தைகளையெல்லாம் காப்பாற்றுங்கள் என்று தனது மக்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.